விவசாயத்துக்கு தோள் கொடுக்கும் தென்னை நார் கழிவு

 Saturday, December 8, 2018  01:55 PM

இருந்தாலும் பொன், இறந்தாலும் பொன் என்பது தென்னைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். தென்னை விளைபொருளாக மட்டுமல்லாமல் விவசாயத்திற்கான சிறந்த இடுபொருளாகவும், மூலப் பொருளாகவும் மாறியுள்ளது. அண்மைக்காலமாக அனைவரும் விருப்பம் காட்டிவரும் மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம், மண்ணில்லா விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு தென்னை நார் கழிவு சிறந்த தேர்வாக உள்ளது.

தென்னையிலிருந்து நார் உட்பட ஏராளமான உப பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை சரியான முறையில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றினால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கின்றனர் பொள்ளாச்சி காயர் சிட்டி கன்சார்டியம் அமைப்பினர். தென்னை நாரில் வடிவமைக்கப்பட்ட கதவு, ஜன்னல், அட்டைகள், ஓவியம் என பல மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகின்றனர். அவர்களது மற்றொரு முயற்சி செறிவூட்டப்பட்ட நார்க்கழிவு உரம் தயாரித்தல்.

தென்னை நார்க்கழிவுகளை விவசாய நிலங்களில் பரப்பி, இயற்கை உரமாகவும், நீர் சேமிப்பு காரணியாகவும், நுண்ணுயிரிகள் வளர்த்து அதன் மூலம் விவசாயத்தைப் பெருக்கவும் பயன்படுத்துகின்றனர். இதன் அடுத்த கட்ட முயற்சியே மண்ணில்லா விவசாயம். முழுவதும் தென்னை நார்க் கழிவுகளை வைத்து அதன் மூலம் விவசாயம் செய்வது இதன் பிரதான நோக்கம்.

வளர்ந்து வரும் நகரச் சூழலுக்கு ஏற்ப தற்போது வீட்டுத் தோட்டங்களையும், மாடித் தோட்டங்களையும் அமைத்து மக்கள் தங்களுக்கு தேவை யானவற்றை விளைவித்துக் கொள்கின்றனர். இந்த முயற்சிகளுக்கு எங்களது தென்னை நார் கழிவு செறிவூட்டப்பட்ட உரங்கள் நல்ல பலனைக் கொடுக்கின்றன.தென்னை நாரிலிருந்து வீணாகும் கழிவுத்துகள் இயற்கை யாகவே விவசாயத்திற்கு ஏற்ற சத்து மிக்க பொருட்களாக உள்ளது. அதை செறிவூட்டி மதிப்புக் கூட்டு பொருளாக, விவசாயத்திற்கு பயனுள்ளதாக மாற்றுவதே தென்னை நார் கழிவு செறிவூட்டப்பட்ட உரம். இது இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதுவே மதிப்புக்கூட்டப்பட்ட பொருளுக்கான தரத்தை மதிப்பிடக் கூடியது.

தயாரிப்பு முறை குறித்து கூட்டமைப்பு நிர்வாகி கெளதமன் கூறுகையில், 'தென்னை நார்க்கழிவு, காளான் விதைகள், மீண்டும் நார்க் கழிவு, சோயா விதைகள் கொண்ட 15 அடுக்குகளை 20 நாட்களுக்கு மக்க வைத்து அதனைக் குழிகளில் நிரப்புகிறோம். அதில் பஞ்சகவியம் அல்லது தசகவியம், மண்புழு உரக் கழிவு, செறிவூட்டும் நுண்ணுயிரிகள், துளசி நீர் உள்ளிட்டவற்றைக் கலந்து 2 மாதங்களுக்கு மீண்டும் மக்க வைத்து பல படிநிலைகளில் இந்த உரம் தயாராகிறது. இது விவசாயத்திற்கு உரமாகவும், மாடித் தோட்டங்களில் மண்ணுக்கு மாற்றாகவும் பயன்படுகிறது.

மண்ணில்லா விவசாயத் திற்கென, புற ஊதாக் கதிர் களை உள்ளிழுத்து தக்க வைக்கும் பைகள் தயார் செய்து செறிவூட்டப்பட்ட உரத்தை முழுவதுமாக நிரப்பி பயிரிடப் படுகிறது. இந்த உரத்தில் பல வகை ஊட்டச்சத்துக்கள் இருப்பதோடு செடிகளுக்கு வேரில் காற்றோட்டத்தைக் கொடுத்து, நுண்ணுயிரிகள் வளரவும், வேர்கள் உறுதிக்கும் உதவும். இதனால் நகரங்களில் இதனை விரும்பி வாங்குவோர் அதிகரித்துள்ளனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அல்லது கயிறு வாரியத்தில் எங்களது தயாரிப்புகள் ஆய்வுக்கு உட்படுத் தப்படுகிறது. பல விதமான பயிர்களை நாங்கள், பயிரிட்டு நாற்றுக்களாகவும் கொடுக்கி றோம். தனியே செறிவூட்டப்பட்ட உரங்களையும் விற்கிறோம் என்கிறார். மேலும் விவரங்களுக்கு 9443136451.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Insta_right
mobile_App_right
fb_right
Telegram_Side
Twitter_Right