பாக்கு தட்டு தயாரிப்பில் நிலையான வருவாய் அசத்துகிறார் ஆனைமலை பெண் விவசாயி

 Saturday, December 15, 2018  03:26 PM

விவசாய குடும்ப பெண்கள், கிடைக்கின்ற விவசாய கூலி வேலைக்குச் சென்றோ அல்லது விவசாயம் செய்தோ வீட்டிலேயே முடங்குகின்றனர். இவர்களுக்கிடையே, விவசாயத்தையும் கவனித்துக் கொண்டு, பகுதி நேர சுய தொழிலாக, பாக்கு மட்டை தட்டுக்கள் தயாரித்து விற்பனை செய்து அசத்துகிறார் பெண் விவசாயி மரகதம்.
ஆனைமலை அடுத்த குளத்துப்புதுாரைச் சேர்ந்த முரளிமோகன கிருஷ்ணனின் மனைவி மரகதம், 47. இவர், தனது தென்னந்தோப்பில் கணவனுடன் இணைந்துவிவசாய பணியில் ஈடுபட்டுள்ளார்.

நிலத்தில், கொட்டகை அமைத்து கூடுதல் வருமானத்துக்காக, சுயதொழிலாக பாக்கு மட்டைகளை பயன்படுத்தி தட்டுக்கள் தயாரித்து விற்பனை செய்து, சுய தொழில் புரிவோருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.மரகதம் பகிர்ந்து கொண்டதில் இருந்து...

பாக்கு மட்டை தட்டு தயாரிப்புக்காக, 10 ஏக்கர் தென்னந்தோப்புக்குள், 3.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. அதில், பாக்கு மட்டையை அழுத்தி தட்டுக்களாக தயாரிக்க, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்த இயந்திரம் மூலம், 12 மற்றும் 10 அங்குலம் என இருவேறு அளவுகளில் தட்டுக்கள் தயாரிக்கப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களாக பாக்கு மட்டை தட்டுக்கள் தயாரித்து விற்பனை செய்கிறேன். தென்னந்தோப்பு பராமரிப்பு பணி முடித்த பின், தட்டுக்கள் தயாரித்து விற்பனை செய்கிறேன்.

மூலப்பொருளான பாக்கு மட்டை தோட்டங்களில் இருந்து கொள்முதல் செய்கிறேன். ஒரு மட்டை, இரண்டு ரூபாய் விலைக்கு வாங்கப்படுகிறது. டிச., - ஜூன் வரை பாக்கு மட்டைக்கு சீசன் உள்ளதால், விலை அதிகமாக இருக்கும்; மழைக்காலங்களில் ஒரு மட்டை, 1.75 ரூபாய்க்கு கிடைக்கும். ஒரு பாக்கு மட்டையில், 12 அங்குலம் மற்றும் 10 அங்குலம் தட்டுக்கள் தயாரிக்க முடியும்.பாக்கு மட்டைகள் கொள்முதல் செய்ததும், கோடை காலமெனில் இரண்டு மணி நேரத்துக்கும், குளிர்காலத்தில் ஒரு மணி நேரத்துக்கும், தண்ணீரில் ஊறவைக்கப்படுகிறது. மட்டைகளில் தண்ணீர் வடிந்து செல்வதற்காக பத்து நிமிடம் செங்குத்தாக நிறுத்தி வைக்கப்படுகிறது. அதன்பின், 20 நிமிடங்கள் நிழலில் உலர வைக்கப்படுகிறது.
தட்டுக்கள் தயாரிக்க துவங்குவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன்பே இயந்திரத்தை, 'ஆன்' செய்து, வெப்ப நிலையில் வைத்திருக்க வேண்டும். உலர வைத்த பாக்கு மட்டையை இயந்திரத்தில் வைத்து, வெப்ப அழுத்தத்தின் மூலம் தட்டுக்கள் தயாரிக்கப்படுகிறது.

சந்தைப்படுத்துதல் :

தினமும் தயாரிக்கப்படும் தட்டுகள், இயற்கை அங்காடி, கடைகள் மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர் உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 12 அங்குலம் தட்டு ஒன்று, 3.50 ரூபாய்க்கும், 10 அங்குலம் தட்டு ஒன்று, 2.50 ரூபாய்க்கும் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது.
ஆண்டு முழுவதும், பாக்கு மட்டை தட்டுக்கு தேவை இருப்பதால், சந்தைப்படுத்துவதும், விற்பனை செய்வதும் எளிதாக உள்ளது.
பாக்கு மட்டை தட்டுக்களை தயாரிக்க ஆட்களை கூலிக்கு அமர்த்தாமல் குடிசைத்தொழிலாக செய்தால் தினமும், 450 - 550 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். கூலி ஆட்கள் கொண்டு தட்டு தயாரித்தால், 250 ரூபாய் வரை மட்டுமே வருமானம் கிடைக்கும்.

வேலைவாய்ப்பு:

வேளாண்துறையின், 'அட்மா' திட்டத்தில், பாக்கு மட்டை தட்டு தயாரிப்பு குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன. வேளாண்துறை மற்றும் வங்கிகள் பாக்கு மட்டை தட்டு தயாரிப்புக்கு, கடன் உதவி வழங்கினால், 'ஹைட்ராலிக்' இயந்திரம் அமைத்து பெரிய அளவில் பாக்கு மட்டை தட்டுக்கள் தயாரிக்க முடியும். இதனால், குடிசைத்தொழில் செய்து சிறந்த வருமானம் ஈட்ட முடியும், அதுமட்டுமின்றி பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு, மரகதம் தெரிவித்தார்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2