நோய் தீர்க்கும் ஆவாரம்பாளையம் மருத்துவச்சி

 Friday, March 1, 2019  05:30 PM

உடலில் ஏதேனும் பிரச்னை என்றால், மருத்துவரிடம் ஓடுகிறோம். அப்படியே கோயிலுக்கும் சென்று கடவுளைத் தரிசித்து, நம் பிரார்த்தனையை வைத்துவிட்டுச் செல்கிறோம். கொங்கு தேசத்து மக்கள் தங்கள் உடலில் ஏதேனும் தீராத நோய் வந்து அவதிப்பட்டால், உடனே ஸ்ரீபண்ணாரி அம்மனை நாடி வந்து, தங்கள் கோரிக்கையை வைத்துச் செல்கின்றனர். அவளும் நோய் தீர்க்கும் மருத்துவச்சியாகத் திகழ்கிறாள்.

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்தும், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஆவாரம்பாளையம். கோயிலுக்குச் செல்ல, அடிக்கடி பஸ் வசதி உண்டு. ஷேர் ஆட்டோவும் உள்ளது. சுமார் 150 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் இருந்தபடி, தன்னை நாடி வருவோரின் நோய்களைத் தீர்த்து அருள்கிறாள் ஸ்ரீபண்ணாரி அம்மன்.மனத்தில் எப்போதும் கவலை, தொழிலில் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் பிரச்னை, குடும்பத்தில் பூசல் என வாழ்வில் என்ன சிக்கல்கள் வந்தாலும், 'பண்ணாரியம்மா இருக்கும்போது நமக்கென்னப்பா கவலை?’ என்று சொல்லியபடி, அவளின் சந்நிதிக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள், பக்தர்கள். சத்தியமங்கலம் பண்ணாரி அம்மனுக்கு வேண்டிக் கொண்டு, ஏதேனும் காரணங்களால் அங்கே செல்ல இயலாதவர்கள், தங்களது நேர்த்திக்கடனை இங்கு வந்து செலுத்திச் செல்வதாகத் தெரிவிக்கிறார்கள்.

பண்ணாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா பிரசித்தம்! அதேபோல், இங்கேயும் அதே நாளில் விமரிசையாக நடைபெறுகிறது திருவிழா. அந்த நாளில் இங்கு வந்து அம்மனுக்கு மிளகு மற்றும் உப்புக் காணிக்கை செலுத்தி பிரார்த்தித்துக் கொண்டால், எத்தகைய தோல் வியாதியும் விரைவில் குணமாகிவிடும் என்பது நம்பிக்கை.

ஆடி வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், நவராத்திரி காலங்களிலும் இங்கு வந்து ஸ்ரீபண்ணாரியம்மனிடம் வேண்டிக்கொண்டால், பூரண ஆரோக்கியத்துடன் நம்மைச் சிறப்புற வாழ வைப்பாள், ஸ்ரீபண்ணாரியம்மன்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


mobile_App_right
fb_right
Insta_right
Telegram_Side
Twitter_Right