மன்னன் கரிகாலன் கட்டிய 29-வது பெரிய கோவில் - கோவை இடிகரை ஸ்ரீவில்லீஸ்வரர் ஆலயம்.

 Friday, March 8, 2019  05:30 PM   No Comments

விஞ்ஞான அற்புதத்தையும் தாண்டி விண்ணை முட்டி நிற்கும் தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோயில்... சரித்திரச் சின்னமாகவும், இதிகாசப் பெருமையுடனும் அயல் நாட்டினரையும் வியக்க வைக்கும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்... என சோழ மன்னர்களின் கலைத் திறமைக்கும் பக்தி ஈடுபாட்டுக்கும் உதாரணமாக இன்னும் எத்தனையோ கோயில்களை அடையாளம் காட்டிப் பெருமிதப்படலாம். சோழ மன்னர்கள் சைவத்துக்கு ஆற்றியுள்ள தொண்டு அந்த அளவுக்கு மகத்தானது. உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னன் கரிகாற் சோழன் காலத்தில் கொங்கு நாட்டில் (கோவை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள்) ஏராளமான ஆலயங்கள் கட்டப்பட்டன. அவற்றுள் இடிகரை ஸ்ரீவில்லீஸ்வரர் ஆலயம் குறிப்பிடத் தக்க ஒன்று.

கோவை-மேட்டுப்பாளையம் தடத்தில் சுமார் 10 கி.மீ. தொலைவில் வருகிறது துடியலூர். இங்கிருந்து என்.ஜி.ஜி.ஓ. காலனி வழியாக கோவில்பாளையம் செல்லும் பாதையில் எட்டு கி.மீ. தூரத்தில் இருக்கிறது இடிகரை. மண் வாசனையுடன் கூடிய இந்த கிராமத்தில் சுமார் ஆறாயிரம் பேர் வசிக்கிறார்கள். மன்னர்களின் காலத்தில் இருந்தே இடிகரை என்ற பெயர் கல்வெட்டுகளில் காணப்பட்டாலும் இந்த ஊருக்கு இருகரை என்ற இன்னொரு பெயரும் இருப்பதாக ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள்.

துடியலூர் முதல் காரமடை வரை- குருடிமலை, பால மலை, பொன்னூத்துமலை போன்ற மலைகள் உள்ளன. இந்த மலைகளில் பெய்யும் மழைநீர் இந்த ஊரின் இரு கரை (அதாவது இரண்டு பக்கம்) வழியே ஓடி, கோவில்பாளையம் கடந்து நொய்யல் ஆற்றில் கலக்கிறது. எனவே, இந்த ஊர் இருகரை என அழைக்கப்பட்டதாம். பின்னர் அதுவே இடிகரை ஆயிற்று என்றும் சொல்கிறார்கள். இது குறித்து ஒரு பாடல் கூட உண்டு.

குருடிமலை மிசை மீதிலே, பெருகியே வரும் பருகமா நதிக்கரைதனில், வீற்றிருக்கும் இருகரை எனும், துறையூர்ப் பெருமானே! -- என்பதுதான் அந்தப் பாடல்.

இதேபோல், கொங்கு நாட்டின் பல பகுதிகளையும் சோழர்களின் பிரதிநிதிகள் ஆண்டு வந்தனர். இவர்கள் கொங்குச் சோழர்கள் எனப்பட்டனர். கரிகாற் சோழனால் கட்டப்பட்ட இடிகரை வில்லீஸ்வரர் கோயிலை கொங்குச் சோழர்களுள் ஒருவனான விக்கிரம சோழன் (கி.பி. 1255-1263) புதுப்பித்தான். கல்லணை கட்டிச் சாதனை புரிந்த சோழ மன்னன் கரிகாலன், இடிகரை ஆலயத்தைக் கட்டியதே ஒரு தனிக் கதை.

மன்னன் கரிகாலனுக்கு நாடு நலம் பல புரிந்தாலும், வீடு மட்டும் வினையைத் தந்தது. குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்னையால் மன்னன் ரொம்பவே மனம் நொந்து போனான். மன்னனின் வாட்டம் அறிந்த மந்திரிமார்கள், குறி சொல்வதில் தேர்ந்த குறத்தி ஒருத்தியை அரண்மனைக்கு அழைத்து வந்தார்கள். மன்னனின் முகக் குறிப்பு அறிந்த குறத்தி நேர்த்தியாக அதற்கொரு பரிகாரமும் சொன்னாள்: ‘‘கொங்கு நாட்டில் மக்களைக் குடி அமர்த்தி, கோயில் கட்டி, குளமும் வெட்டி வைத்தால் மாமன்னரின் மன வாட்டம் நீங்கும்!’’ அதற்குரிய பரிசை வாங்கிக் கொண்டு குறத்தி வெளியேறினாள். அதன்படி சேனைகளுடன் புறப்பட்டான் கரிகாலன். குறத்தி குறிப்பிட்ட பகுதியை அடைந்தான். காடுகளை வெட்டி ஊர் ஆக்கினான். நீர்வளம் பெருகக் குளம் வெட்டினான். அக்கம் பக்கத்துக் கிராமங்களிலிருந்து மக்களையும் அழைத்து வந்து குடியமர்த்தினான். அந்த கிராம நிர்வாகத்துக்குப் பொருத்தமான அதிகாரிகளையும் நியமித்தான். இப்படி கொங்கு தேசத்தில் தொடர்ச்சியாக முப்பத்தாறு பெரிய ஆலயங்களும் முந்நூற்றுஅறுபது சிறு ஆலயங்களும் முப்பத்திரண்டு அணைகளும் கட்டித் திருப்பணி செய்து தன் சொந்தத் துயரம் போக்கினான். இப்படி மன்னன் கரிகாலன் கட்டிய பெரிய கோயில்களுள் இருபத்தொன்பதாவதாக இடம் பெறுகிறது, இடிகரை ஸ்ரீவில்லீஸ்வரர் ஆலயம்.

இந்த ஸ்ரீவில்லீஸ்வரர் கோயிலைக் கட்டுவதற்கு முன்பாக இருகூர் நகரைக் கடந்து இருண்ட வனத்தில் இடம் தேடி வந்து கொண்டிருந்தான் கரிகாலன். அப்போது அந்தப் பகுதியை ஆண்ட சேர மன்னனிடம் பலி கேட்டாள் காட்டின் காவல் தெய்வமான வில்லிதுர்க்கை பத்ரகாளி. சேர மன்னன் இந்த விவரத்தை சோழனிடம் தெரிவித்தான். அப்போது, காட்டை அழித்து ஊராக்கிய பின் துர்க்கைக்குக் கோயில் கட்டுவதாகச் சொன்னான் கரிகாலன். பின்னர் காட்டை அழிக்கும்போது வில்லீஸ்வரர் எனும் சிவலிங்கம் அவனுக்குக் கிடைத்தது. எனவே, அதை வைத்தே இடிகரையில் ஸ்ரீவில்லீஸ்வரர் ஆலயத்தைக் கட்டினான் என்கிறது வரலாறு. அதன் பின் இடிகரை நகர் முன்னேற்றத்துக்கு வேண்டியன எல்லாமும் செய்தான் மன்னன் கரிகாலன். உழவுப் பணிக்கும் வாணிகத்துக்கும் நகரில் அதிகாரம் செலுத்தவும், ஊர் வரவு- செலவைக் கவனிக்கவும், கோயிலில் ஊழியம் செய்யவும், கோயிலில் நாட்டியமாடவும் தகுந்த நபர்களைத் தேர்வு செய்து நியமித்தான்.

அதாவது வனவாசத்தின்போது ஸ்ரீராமபிரான் இங்கு வந்து இந்த ஈசனிடமிருந்து வில்லை வாங்கிச் சென்றாராம். அதனால், வில்லீஸ்வரர் ஆனாராம். இதற்கு ஆதாரமாக இடிகரைக்கு அருகே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள கோவிந்தநாயக்கன் பாளையத்தில் கோதண்டராமர் கோயில் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இத்தகு பெருமை வாய்ந்த வில்லீஸ்வரர் ஆலயத்துக்குத் தற்போது போதிய பராமரிப்பு கிடையாது. பக்தர்கள் இந்தக் கோயிலை அடைவதற்குச் சரியான பாதை வசதிகூட இல்லை. மெயின் ரோட்டில் இருந்து எந்தச் சந்தில் திரும்பினால் கோயிலை அடையலாம் என்பது உள்ளூர்க்காரர்களுக்கு மட்டுமே தெரியும் போல் இருக்கிறது. அப்படியும் இந்தக் கோயிலுக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையை மன்னன் கரிகாற் சோழன் ஒருவேளை பார்க்க நேர்ந்தால், கதறிக் கண்ணீர் விட்டிருப்பான். பாவம்... பார்த்துப் பார்த்து அவன் இழைத்துக் கட்டிய கோயில் ஆயிற்றே!

உள்ளூரில் உள்ள ஆன்மிக அன்பர்களின் உதவியால் தினமும் இரண்டு கால பூஜை நடக்கிறது. வருமானம் இல்லாத இந்தப் புராதன ஆலயத்துக்குப் பராமரிப்பும் கவனிப்பும் அதிகம் தேவை. ஆலய விமானங்களில் செடிகளும் மரங்களும் கண்டபடி வளர்ந்திருக்கின்றன. சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு வரை இங்குள்ள ஸ்ரீபாலசுப்ரமணியருக்கு ஒவ் வொரு மாதமும் நடக்கும் கிருத்திகை விழாவுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்க ளாம். ஆனால், இன்று அந்த நிலை இல்லை. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் வில்லீஸ்வரர் ஆலயத்துக்குச் சொந்தமான உற்சவர் விக்கிரகங்கள் (ஸ்ரீசந்திரசேகர்-உமாதேவி, நடராஜர்-சிவகாமி, வள்ளி தெய்வானையுடன் சுப்ர மணியர், விநாயகர், பிட்சாண்ட வர் மற்றும் சுந்தரர், அப்பர் ஆகியோர்) வேறோர் ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவாம். விசேஷ காலத்தில் மட்டும் அந்த விக்கிரகங்கள் இந்தக் கோயிலுக்கு எடுத்து வரப்படு மாம். ஆலயத்துக்கான வாகன மண்டபம் இடப்பக்கத் தில் அமைந்துள்ளது. 1975-ஆம் ஆண்டு ஊர்மக்களின் பேராதரவுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின், திருப்பணிகள் ஏதும் நடைபெறவில்லையாம்.

கோயிலுக்குத் திருப்பணி செய்து கும்பாபிஷே கம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளூர்வாசி களிடம் மேலோங்கிக் காணப்படுகிறது. அதற்கான சில ஆயத்தப் பணிகளையும் தற்போது மேற் கொண்டிருக்கிறார்கள். பிரபல ஸ்தபதிகளை வர வழைத்து விசாரித்ததுடன் சமீபத்தில் பிரஸ்னமும் பார்த்திருக்கிறார்கள். இனி, ஆலய தரிசனம் செய்வோமா?

இந்தக் கோயிலுக்குக் கோபுரம் என்று எதுவும் இல்லை. கொடிமரம் இல்லை. அதற்கு பதிலாக கோயிலுக்குள் தீபஸ்தம்பம் கம்பீரமாக நிற்கிறது. தீபஸ்தம்பத்தின் நாற்புறமும் முருகன், வேல், விநாயகர், பசுபதீஸ்வரர் உருவ அமைப்புகள் தெளிவாகவும் அழகாகவும் தெரிகின்றன. பலி பீடம், நந்தி ஆகியவற்றைத் தாண்டியதும் வில்லீஸ்வரர் ஆலயம். இங்கு வில்லீஸ்வரர், பாலசுப்ரமணியர் மற்றும் அம்பாள் வேதநாயகிக்குத் தனித் தனிக் கோயில்கள் அடுத்தடுத்து வரிசையாகக் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.

கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்று மூன்று பகுதிகளைக் கொண்டது ஸ்ரீவில்லீஸ்வரர் ஆலயம். கருவறையில் மூலவர் ஸ்ரீவில்லீஸ்வரர் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். கருவறையின் வடபுறச் சுவரில் - வெளியே ஸ்ரீதட்சிணாமூர்த்தி எழுந்தருளி உள்ளார். கருவறையின் தென்புறச் சுவருக்கும் அருள்மிகு பாலசுப்ரமணியர் ஆலயத்துக்கும் இடையே தனக்கு உண்டான இடத் தில் தெற்கு நோக்கி சண்டிகேஸ்வரர் வீற்றிருக்கிறார். மகா மண்டபத்தில் தென் புறமாக வடக்கு நோக்கி அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரும், கிழக்கு நோக்கி மூல விநாயகரும் எழுந்தருளி உள்ளனர்.

மகா மண்டபத்தில் கனகசபை உள்ளது. மகா மண்டபத்தின் வடபுறச் சுவரில் விஷ்ணுதுர்க்கை காட்சி தருகிறாள். மகா மண்டபத்தை ஒட்டி நவக்கிரக சந்நிதியும் உண்டு. மகா மண்டபத்தின் முன் பிரதோஷ நந்தி, மூலவரை நோக்கி அமர்ந்துள்ளார். வில்லீஸ்வரர் ஆலயத்துக் குத் தென்கிழக்கே மேற்கு நோக்கி சூரிய பகவான் வீற்றிருக்கிறார். வெளியே தனிச் சந்நிதியில் கால பைரவர் கோயில் கொண்டுள்ளார்.ஸ்ரீவில்லீஸ்வரர் ஆலயத்தை அடுத்து அதே வரிசையில் ஸ்ரீபாலசுப்ரமணியருக்குத் தனி ஆலயம். இங்கு விமானம் உண்டு. மகா மண்டபத்தின் முன் மயில் வாகனம் இருக்கிறது. இரண்டு கைகள். கையில் வேலுடன் எழிலாகக் காட்சி தருகிறார். ஸ்ரீபாலசுப்ரமணியரின் ஆலயம் வெகுவாக இடிபாடுகளுக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த ஆலயத்தின் மகா மண்டபம் எந்த நேரமும் இடிந்து விழலாம் போல் காணப்படுகிறது. உடனடியாக, ஸ்ரீபாலசுப்ரமணியரைப் பராமரிப்பது அவசியம். அடுத்து, அருள்மிகு வேதநாயகி அம்மன் கோயில். ஸ்ரீபாலசுப்ரமணியரை அடுத்து அமைந்துள்ளது. விமானம் உண்டு. நான்கு கைகள். இரண்டு கைகளில் தாமரை மலர்கள். மற்ற இரண்டு கைகள் வர-அபய முத்திரைகள் காட்டிய வண்ணம் உள்ளன.

ஸ்ரீவில்லீஸ்வரர், ஸ்ரீபாலசுப்ரமணியர், ஸ்ரீவேதநாயகி ஆகிய மூவரும் ஒரே வரிசையில் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலம், சோமாஸ்கந்த மூர்த்தி வடிவம் என்பார்கள். இந்த அமைப்பு அபூர்வமான ஒன்று.

‘‘இந்த ஆலயத்தில் வில்லீஸ்வரர் சந்நிதிக்குக் கீழே ஒரு சுரங்கம் உண்டு. போர் மற்றும் இதர அசந்தர்ப்பங்களின்போது இந்தச் சுரங்கத்தின் வழியே சென்று அருகில் இருக்கும் மற்ற இரு சிவாலயங்களைத் தரிசிப்பது கரிகாற் சோழனின் வழக்கம். மற்ற இரண்டு தலங்கள்_ இங்கிருந்து ஒன்பது கி.மீ. தொலைவில் உள்ள கோவில்பாளையம் காலகாலேஸ்வரர்; எட்டு கி.மீ. தொலை வில் உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர். இதற்கு சாட்சி - இந்த மூன்று கோயில்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளதுதான்!’’ என்கிறார் உள்ளூர் பக்தர் ஒருவர்.

ஸ்ரீவில்லீஸ்வரர் சிறப்பு பற்றி ஆலய அர்ச்சகர் கௌரி சங்கர் நம்மிடம், ‘‘இந்த ஈஸ்வரனைத் தொழுதால் செல்வத்துக்கு என்றுமே குறைவு இருக்காது. சம்பளம் கம்மியாக இருந்தாலும் நம்மை என்றைக்குமே பட்டினி போட மாட்டார். இதற்கு நானே பெரிய உதாரணம். பன்னிரண்டு வருஷமா இந்தக் கோயில்ல கைங்கர்யம் பண்ணிட்டு வர்றேன். இதை விட்டா எனக்கு வேற வழி இல்லே!’’ என்று சிரித்தார். தொடர்ந்து அவர் சொன்னார்: ‘‘வழக்கு, வில்லங்கம் என்று அலைந்து கொண்டிருப்பவர்கள், நியாயமான கோரிக்கைக்கு இந்த ஈசனிடம் விண்ணப்பித்து அபிஷேகம் செய்தால் போதும். மூன்று மாதங்களுக்குள் தீர்த்து வைக்கிறார். என் அனுபவத்தில் இதை நான் பார்த்திருக்கிறேன். சோமாஸ்கந்த அமைப்பு வடிவத்தில் இந்தத் தலம் அமைந்துள்ளதால், திருமணத் தடைகளுக்கு இங்கு வந்து பிரார்த்தித்தால் போதும். நல்லபடியாக நடத்திக் கொடுத்துவிடுவார்.

மாதக் கார்த்திகை, மாத பிரதோஷம், மாத சதுர்த்தி, பைரவருக்கான அஷ்டமி பூஜை, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, பங்குனி உத்திரம், கார்த்திகை தீபத் திருவிழா போன்றவை உட்பட பல வைபவங்கள் இங்கு சிறப்பாக நடக்கும். ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் 14,15,16 ஆகிய தினங்களில் ஸ்ரீவில்லீஸ்வரருக்குக் கதிரவன் தன் கிரணங்களால் காலை நேரத்தில் பூஜை செய்வது காணக் கண்கொள்ளாக் காட்சி!’’ இடிகரை வில்லீஸ்வரர் ஆலயம் பற்றிய தொன்மையான செய்திகளை அறிந்து கொள்ள வசதியாக இதுவரை 26 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இந்தக் கல்வெட்டுகள் மூலம் மன்னர்கள் மற்றும் பொதுமக்கள் மனமுவந்து கோயிலுக்கு அளித்த கொடைகள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

ஆன்மிக அறிஞர்கள் அடிக்கடி சொல்லும் இந்த விண்ணப்பத்தைத்தான் நாமும் இங்கு முன்வைக்கிறோம். அந்த விண்ணப்பம் இதுதான்: ‘புதிது புதிதாகக் கோயில்களைக் கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை; இருக்கிற கோயில்களை நன்றாகப் பராமரித்தாலே போதும்

எப்படிப் போவது?

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் பத்து கி.மீ. தொலைவில் இருக்கிறது துடியலூர். இங்கிருந்து கோவில்பாளையம் செல்லும் தடத்தில் ஒன்பதாவது கி.மீ. தூரத்தில் வருகிறது இடிகரை. கோவை-காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவில்பாளையத்துக்கு நகரப் பேருந்துகள் இருக்கிறது. உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இடிகரைக்கு நேரடி நகரப் பேருந்துகள் உண்டு. தவிர, இடிகரைக்கு துடியலூரில் இருந்து மினி பஸ் வசதியும் இருக்கிறது. தங்குவதற்கும் உணவுக்கும் கோவையில் வசதிகள் தாராளம்.

ஆலயம் குறித்த தகவல்களுக்கும் உதவிக்கும்:

ஜி. கௌரிசங்கர், ஆலய குருக்கள்,
45 தேர் வீதி, இடிகரை,
கோவை - 641 022.
போன்: 0422 - 551 3063.

தீனபந்து (முன்னாள் அறங்காவலர்)
3, மாகாளியம்மன் கோயில் வீதி,
இடிகரை,
கோவை - 641 022.
போன்: 0422 - 246 1949.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

mobile_App_right
Twitter_Right
Insta_right
Telegram_Side
fb_right