அருள்தரும் அன்னை தண்டுமாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

 Wednesday, March 13, 2019  09:56 AM   No Comments

கோவை அவினாசி நெடுஞ்சாலையில் அன்னை தண்டுமாரி, முப்பெருத்தேவியாய், சகல சவுபாக்கியங்களையும் வாரி வழங்கும் கற்பகரட்சாம்பிகையாய் திகழ்ந்து வருகின்றாள்.

இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் கோவை நகர் வரலாறு புகழ் மிக கொண்டது. கோவன்புதூர் என்ற சிற்றூராகத் திகழ்ந்தது. கோயமுத்தூர் கோட்டை வலிமை பொருந்தியதாக விளங்கியது. நகரம், கோட்டை மற்றும் பேட்டை என்ற இரண்டு பெரும் பிரிவுகளாகத் திகழ்ந்தன. கோட்டையில் ஒரு ஈசுவரன் கோயிலும், பேட்டையில் ஒரு ஈசுவரன் கோவிலும் இன்றும் பொலிவுடன் திகழ்கின்றன.

கோவை மறுமலர்ச்சி

வணிகம் செய்வதற்கு வந்த ஆங்கிலேயர் நம் மக்களிடையே காணப்பட்ட ஒற்றுமையின்மையை பயன்படுத்தி நம் நாட்டையும் நம் மக்களையும் அடிமைகளாக மாற்ற தந்திரங்களையும் வஞ்சகத் திட்டங்களையும் கையாண்ட தருணத்தில் பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்க்கத் தொடங்கினர். அதுபோல் மைசூர் மன்னன் திப்புசுல்தான் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிந்து நமது மக்களின் அடிமை வாழ்வை மீட்க தமது படையுடன் கோவை கோட்டை மதிலுக்குள்ளே தங்கியிருந்தான்.

அந்தக் காலத்தில் தான் நம் அன்னை தண்டுமாரி மக்களுக்கு அருள்மழை பொழியத்தன் இருப்பை உணர்த்தி வெளிப்பட்டு எழுந்தருளினாள்.

தண்டு

தண்டு என்னும் சொல்லுக்குப் படைவீரர்கள் தங்குவதற்கு அமைக்கப்படும் கூடாரம் என்பது பொருள் மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வரதாபி என சேக்கிழார் குறிப்பிடுகின்றார். சிறுத்தொண்டராகிய பரஞ்சோதி வடநாட்டுக்கு படையெடுத்துச் சென்று வென்ற செய்தியைக் கூறும் பொழுது சேக்கிழார் பெரியபுராணத்தில் இச்சொல்லை சிறப்பித்துக் காட்டினார்.

இந்த தண்டு என்னும் சொல்லே அன்னையின் பெயருக்கு அமுதூட்டும் சிங்காரச் சொல்லாய், சிறப்புப் பெயராய் அன்னையின் பெயருடன் சேர்ந்து வழங்கி வருகிறது. கோவை அவினாசி நெடுஞ்சாலையில் அன்னை தண்டுமாரி, முப்பெருத்தேவியாய், அகிலாண்ட நாயகியாய், ஆதி பராசக்தியாய், சாந்தசொரூபிணியாய் சகல சவுபாக்கியங்களையும் வாரி வழங்கும் கற்பகரட்சாம்பிகையாய் எழுந்தருளி கோவை நகரை அரசாட்சி செய்யும் அன்னையாய் திகழ்ந்து வருகின்றாள்.

நோய் தீர்க்கும் தாய்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முதுமொழி, அக்காலத்தில் காலரா, பிளேக், அம்மை ஆகியவை கொடிய நோய்களாகக் கருதி அஞ்சப்பட்டன. நம் தண்டுமாரியம்மன் பக்தர்களுக்கு நோய் அணுகாத நல்வாழ்வை வழங்கி காத்து வருகிறாள்.

அன்னையை மறவாத வீரர்கள்

திப்புவின் படைவீரர்கள் அன்னை எழுந்தருளிய இடத்தில் சின்னஞ்சிறு ஆலயம் அமைத்து வழிபட்டு வந்தனர். மன்னன் ஆணைப்படி தண்டு எனும் படைவீடு இடம் மாறியபோதும் வீரர்கள் தண்டுமாரியம்மனை மறவாமல் தமக்கு இன்னல் வந்த போதெல்லாம் வந்து வணங்கினர். திருவிழாக் காலங்களில் அன்னையை வந்து தொழுது வேண்டினர். தம்மை நாடி வரும் பக்தர்களின் நோய் அகல அன்னை வேப்பிலையிலும், தீர்த்தத்திலும் கலந்து அருள் செய்தாள்.

மேனியில் அவைபட்டவுடனே நோயின் வேகம் குறைந்தது. கவலைகள் மறைந்தன. சுபகாரியங்கள் இன்னும் கைகூடவில்லையே என்று ஏங்கியவர் பலரும் நம்பிக்கையோடு தண்டுமாரியை நாடி வந்தனர். தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் வேண்டுவன வழங்கி கருணைக்கடலாய் அன்னை தண்டுமாரி அருள்பாலித்து வருகின்றாள்.வழிபாட்டின் மேன்மைகள்

கோவை தண்டுமாரியம்மன் தீராத நோய் தீர்ப்பதில் வல்லவள், செவ்வாய்க்கிழமைகளில் எலுமிச்சைபழம் தோலில், இராகு கால நேரத்தில் நெய்தீபம் ஏற்றி ஒன்பது வாரம் வழிபாடு செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல சுபவேளை கைகூடும். வெள்ளிக்கிழமை அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பாக வழிபாடு செய்து சகல நன்மைகளையும் செளபாக்கியங்களையும் குறைவில்லாமல் பெற்று வாழ்வில் பயனடைந்து வருகின்றனர்.

படைவீரனுக்கு கனவில் அருள் காட்சி

திப்புவின் படைகள் கோவை கோட்டை மதிலுக்குள் தங்கியிருந்த சமயத்தில் எண்ணற்ற வீரர்கள் படையில் இருந்தனர். ஆனால் அவள் உள்ளத்தை கொள்ளை கொண்ட ஒரு வீரனுக்கு அன்னை கனவில் அருள் காட்சி அளித்தார். கண்ணுக்கும், கருத்துக்கும் அரிய நம் தாய் தண்டுமாரியம்மன் கற்பனைக்கு எட்டாத காலம் முதல் இப்புவியில் வாழ்ந்து வருவதாக கூறினாள்.

வேப்ப மரங்களுக்கும், செடி, கொடிகளுக்கும் இடையில் நீர்ச்சுனைக்கும் அருகில் அமைந்துள்ள இக்காட்டுப் பகுதியில் அன்னை தண்டுமாரி வீற்றிருந்த கோலத்தை கனவில் கண்ட வீரன் மறுநாள் எழுந்து அதிகாலையில் விரைவாக ஆவலுடன் தேடினான். வேப்பமரத்தின் கிளைகளைத் தன் கைகளால் விலக்கி பார்த்த பொழுது பெற்ற தாயை முதலில் நோக்கும் குழந்தையாய் அவன் அன்னையை முதலில் கண்டு இன்புற்றான். பின்பு தன் கண்கள் இன்புற்றதோடு மட்டுமல்லாமல் கையெடுத்து தொழ ஆரம்பித்தான்.

அவன் அடைந்த இன்பத்திற்கு எல்லையின்றி அமையவே கூத்தாடி மகிழ்ச்சியுற்றான். பின் அனைத்து படைவீரர்களுக்கும், நண்பர்கள், உறவினர்களுக்கும் நம் அன்னையை கோவையில் காவியத் தலைவியாய் பறைசாற்றத் தொடங்கினான். நல்ல நாள் பார்த்து சிறு மேடை அமைத்து அம்மேடை மீது அன்னை தண்டுமாரியை எழுந்தருளச் செய்தான்.

இங்ஙனம் எழுந்தருளிய நம் அன்னை தண்டுமாரி கோவையில் கொலு வீற்றிருக்கும் செய்தி எல்லா இடங்களிலும் எல்லாரிடத்திலும் பேசப்பட்டது. படைவீடான தண்டு இருந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மாரி தண்டுமாரி என அழைக்கப் பெற்றாள். பசியும், பிணியும் நீங்கி அன்னையை எண்ணி வழிபட்ட பக்தகோடி பெருமக்கள் எண்ணிக்கை நாளும் பெருகியது. அன்னையின் புகழ் அகிலமெங்கும் எதிரொலித்தது.

நிகழ்ச்சி நிரல்

தண்டுமாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று 13.03.2019 புதன்கிழமை காலை 6.30 மணிக்குமேல் 7.15 மணிக்குள் நடைபெறுகிறது.

பூச்சாட்டு

சித்திரை மாதத்தில் முதல் செவ்வாய் கிழமையன்று அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழாவானது பூச்சாட்டுடன் தொடங்கப் பெறுகிறது. அன்று மாலை 6.30 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்வித்து மேள தாளங்கள் முழங்க கம்பம் எடுத்து வந்து சுவாமி சன்னிதானத்தில் வசந்த மண்டபத்தில் கம்பத்தை ஆவாகனம் செய்து மலர் மாலை களினால் கம்பத்திற்கு அலங்காரம் செய்து ஆராதனை நடைபெறும்.

அக்கினிச்சாட்டு

சித்திரைத் திருவிழாவில் மூன்றாம் நாளன்று அம்மனுக்கு அக்கினிச்சாட்டு விழா நடைபெறும். அன்று மாலை 6.30 மணியளவில் அக்கினிச்சட்டியை அம்மனின் திருமலர் பாதங்களில் வைத்து அக்கினிச்சட்டியில் அக்கினி வளர்க்கப்படும். பின்பு அக்கினி கம்பத்திற்கு பூஜை செய்யப்பட்டு மேற்படி கம்பத்தையும் அக்கினிச் சட்டியையும் இத்திருக்கோயில் பூசாரிகள் எடுத்து கோவிலைச் சுற்றி வலம் வந்து பூச்சாட்டுக் கம்பத்தை எடுத்து விட்டு அக்கினிச்சாட்டு கம்பத்தை ஆவாகனம் செய்து மேற்படி கம்பத்தின் மூன்று கிளைகளிலும் குழல் ஓடுகளைச் செருகி அதன்மேல் அக்கினிச்சட்டியை வைப்பார்கள். அக்கினிச் சட்டியில் எரியும் அனல் நெருப்பினால் அன்னையவள் ஜோதி சொரூபியாக அருள்பாலித்து இப்பூவுலகைக் காத்து இரட்சிக்கிறாள்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

mobile_App_right
Twitter_Right
Insta_right
fb_right
Telegram_Side