கோவையை உருவாக்கிய பஞ்சாலைகள்.. இன்று எங்கே போனது..?

 Wednesday, November 24, 2021  01:48 PM   No Comments

டெக்ஸ் சிட்டி...தென்னிந்தியாவின் மான்செஸ்டர்...இதெல்லாம் கோயம்புத்தூருக்கு இருக்கும் கூடுதல் அடைமொழிகள். அந்த பெயர் வந்ததன் வரலாறு...

சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவரால் கோவையில் 1888ல், 'கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ்' என்ற பெயரில் முதல் பஞ்சாலை துவக்கப்பட்டது. இன்றும் 'ஸ்டேன்ஸ் மில்ஸ்' என்று அழைக்கப்படுவது, அந்த ஆலைதான். பஞ்சாலை மட்டுமின்றி, பள்ளி மற்றும் தொழிலாளர் நலத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியவர் ராபர்ட் ஸ்டேன்ஸ்.

சில ஆண்டுகளுக்குப் பின், வெங்கட்ரமணா அய்யங்கார் என்பவர் ஸ்டேன்ஸ் மில்லை விலைக்கு வாங்கினார்; 1930ல் கோபால் நாயுடு குடும்பத்தின் கைக்கு அது மாறியது. 1890ல் சர் ராபர்ட் ஸ்டேன்ஸ், நெசவு வசதிகொண்ட 'மால் மில்' துவக்கினார். சில ஆண்டுகளுக்கு பிறகு சாத்தப்ப செட்டியார், அந்த மில்லை வாங்கி 'சோமசுந்தரம் மில்ஸ்' எனப் பெயரிட்டார்.

1907ல் சாத்தப்ப செட்டியார் மற்றும் தேவகோட்டை ஜமீந்தார் இணைந்து 'காளீஸ்வரா மில்ஸ்' உருவாக்கினர். 1910ல் பஞ்சாலையாக துவங்கிய லட்சுமி மில்ஸ், சில ஆண்டுகளுக்கு பின் ஜவுளித்துறை உற்பத்தி நிறுவனமாக மாற்றப்பட்டது. 1922ல் பி.எஸ்.ஜி., குழுமத்தின் சார்பில் ரங்கவிலாஸ் ஜின்னிங், ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ் துவக்கப்பட்டது.

கோவை மில்கள் வளர்ச்சியில் 1932ம் ஆண்டு முக்கியமானதாக ஆண்டாகும். பைகாரா ஹைட்ரோ எலக்ட்ரிக் புராஜெக்ட் திட்டத்தால் கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளில் தேவையை விட அதிக அளவில் மின்சக்தி கிடைத்தது. 1929ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஜவுளித்துறை இயந்திரங்களின் விலை கணிசமாக குறைந்தது.

கோவை மாநகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 1930 முதல் 1939ம் ஆண்டுகளில் 27 மில்கள் புதிதாக துவக்கப்பட்டன. 1930ல் அகமதாபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் கைத்தறித்துறைக்கு வழங்க போதிய நூல்கள் இல்லாததால், தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் நூல்கள் மட்டுமே நாட்டின் ஒட்டுமொத்த கைத்தறித்துறைக்கு வழங்கப்பட்டன.சுதந்திரத்துக்கு பிறகு, புதிய கைத்தறி நெசவுக்கூடங்கள் துவக்க தடை விதிக்கப்பட்டது. கைத்தறி மற்றம் விசைத்தறி கூடங்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்க, மில்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதுவரை வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்ருடிந்த மில்கள், தொழிலில் நிலைத்திருக்க குறுந்தொழில்துறையை நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக பணியாற்றிய சண்முகம் செட்டியாரின் ஆலோசனையின் பேரில், தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) 1933 பிப்ரவரியில் துவக்கப்பட்டது.

அதில், பக்கிங்காம் அண்ட் கர்நாடிக் மில்ஸ், கோயமுத்தூர் காட்டன் மில்ஸ், கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ், காளீஸ்வரா மில்ஸ், லட்சுமி மில்ஸ், ஸ்ரீ மீனாக்ஷி மில்ஸ், பங்கஜா மில்ஸ், ராதாகிருஷ்ணா மில்ஸ், ராஜலட்சுமி மில்ஸ், ரங்கவிலாஸ் ஜின்னிங், ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ், வசந்தா மில்ஸ் உள்ளிட்ட 11 மில்கள், உறுப்பினர்களாக இருந்தன.

சங்கத்தில், ஜி. குப்புசாமி நாயுடு, சி.வி. வெங்கட்ரமணா அய்யங்கார், பி.எஸ்.சாத்தப்ப செட்டியார், பி.எஸ். பத்மநாபன், சி.ஆர். சதாசிவ முதலியார், வி.ரங்கசாமி நாயுடு, பி.ரங்கசாமி நாயுடு, பி.எஸ்.ஜி., கங்கா நாயுடு மற்றும் ஆர்.கே. ராமகிருஷ்ணன் செட்டியார் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருந்தனர். இதன் முதல் தலைவர், பி.எஸ்.சாத்தப்ப செட்டியார்.

இந்த சங்கத்தில் தற்போது 475 மில்கள் உறுப்பினர்களாக உள்ளன. கோவை மற்றும் சுற்றுப் பகுதிகளில் தற்போது 120 மில்கள் வரை இயங்குகின்றன. ரேஸ்கோர்ஸ் பகுதியில், இவ்வமைப்பின் அலுவலகம் உள்ளது. தலைவராக தினகரன், துணைத் தலைவர்களாக ராஜ்குமார், செந்தில்குமார் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக பொறுப்பு வகிக்கின்றனர்.

அன்றைக்கு, கோவைக்கு பஞ்சாலை நகரம் என்று பெயர் பெற்றுத் தந்த பல ஆலைகளும், இன்று இயக்கமின்றி முடங்கிப்போய், மரங்கள் அடர்ந்த பசுஞ்சோலைகளாக மாறி விட்டன; சில மில்கள், கான்கிரீட் காடுகளாக உருமாறியுள்ளன. பஞ்சாலை நகரம் என்ற பெருமையை, கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது கோவை.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel