கோவையில் வாழ்ந்த முதுபெரும் மரபுக்கவிஞர் வெள்ளியங்காட்டான்.

 Tuesday, October 1, 2019  03:30 PM   No Comments

எளிய விவசாயக் குடிமகனான இவர், பாவலராகவும், பகுத்தறிவாளராகவும், சிறிதுகாலம் ஆசிரியராகவும், தையல் கலைஞராகவும், மெய்ப்புத் திருத்துநராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பல தளங்களில் பயணித்திருக்கிறார். தமக்கென வீடோ, நிலமோ எதுவும் சேர்த்துக் கொள்ளாதவர். வறுமையிலும் செந்நெறி பிறழாதவர். எளியவர்பால் மிகுந்த அன்பு கொண்டவர்.

கவிஞர் வெள்ளியங்காட்டான் கோவையின் தாகம் தணிக்கும் பில்லூர் அணைக்குச் செல்லும் வழியில் உள்ள வெள்ளியங்காடு என்ற அழகிய கிராமத்தில், திரு.நாராயணசாமி், காவேரிஅம்மாள் அவர்களின் மகனாக 21.8.1904 இல் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் மூத்தமகனாகப் பிறந்த இவருக்கு, உடன்பிறந்தவர்கள் பத்துச் சகோதரிகள் ஆவர். இராமசாமி என்பது இவரது இயற்பெயர். தான் பிறந்த கிராமத்தின் எழில் கொஞ்சும் இயற்கை அழகும், அங்குள்ள மக்களின் உழைப்பும், அன்பும் இவரைக் கவர்ந்ததால், அவ்வூரின் பெயரையே தமதாக்கிக் கொண்டார்.

திண்ணைப் பள்ளியில் மூன்றாண்டு மட்டுமே கல்வி பயின்றவர் எனினும் தாமே அரிதின் முயன்று நூல்களைத் தேடி விரும்பிக் கற்றார். இலக்கிய நூல்களான புறநானூறு, வள்ளுவம், இராமாயணம் போன்றனவும், இலக்கண நூல்களான தொல்காப்பியம், நன்னூல் போன்றவற்றையும் ஆழ்ந்து கற்றார். இவற்றோடு கன்னட மொழியையும் கற்றுத் தெளிந்தார். சமஸ்கிருதப் புலமையும் வாய்க்கப் பெற்றவர்.

எழுத்தையே மூச்சாகக் கொண்டு செயல்பட்டவர் கவிஞர். இவையே என்றும் காலத்தால் அழியாது போற்றப்படுவன என்பதை உணர்ந்தவர். இவரது கனவைக் கவிஞரின் மகள் நளினி நிறைவேற்றிவிட்டார். தன் தந்தையின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்து நூலாக்கித் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவரது விடாமுயற்சியும், ஓயாத உழைப்பும் போற்றுத்தலுக்குரியவை.

சமுதாயப் பணிகள்

வெள்ளியங்காட்டான் அவர்கள் எழுத்துப் பணியில் மட்டுமல்லாது, வாழ்க்கையில் மேற்கொண்ட சமுதாயப் பணிகளும் போற்றுதலுக்குரியவை. சமத்துவம், சமதர்மம் பேணியவர். உண்மை, நேர்மை என வாழ்ந்தவர். யாருக்கும் அடிபணியாத குணத்தோடு நெஞ்சில் உறுதியும் துணிவும் கொண்டவர்.

1948இல் சந்தேகவுண்டன் பாளையம் என்ற கிராமத்தில் பகலில் ஆசிரியராகப் பணியாற்றினார். விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு மாலையில் அங்குச் சென்று தமிழ் இலக்கியங்களான புறநானுறு, வள்ளுவம் போன்றவற்றைக் கற்றுக் கொடுத்தார். ஆசிரியராக அங்குச் சிறிது காலமே பணியாற்றினார். இருப்பினும் அவரது ஆக்கம் சமூகத்திற்குத் தேவையான ஒன்றாகும்.

1950இல் அவர் துணைவியின் இழப்பே அவரது பேரிழப்பாகும். 1945இல் கோவையில் வரதராஜபுரம் என்ற பகுதியில் கவிஞர் வாழ்ந்து வந்தார். அச்சமயத்தில் ஊரில் காலரா நோய் பரவிக் கொண்டிருந்தது. கவிஞர் தங்கியிருந்த பக்கத்துத் தோட்டத்தில் வேலை பார்த்த தம்பதியருக்குக் காலரா நோய்த் தொற்றிக் கொண்டது. அத்தோட்டக்காரர் அவர்களை விரட்டி விட அப்பணியாளர்களைத் தன்னுடைய குடியிருப்பில் வைத்திருந்தார். இத்தகைய செயலால் கவிஞரின் வீட்டுக்கும் மாடுகளுக்கும் தண்ணீர் தர தோட்டக்காரர் மறுத்ததால் மாடுகளைத் தெரிந்தவர்களிடம் அனுப்பிவிட்டு வழியின்றிச் செம்பனூரில் குடிபெயர்ந்தார். அவ்வூரில் காந்தியவாதியான லிங்கய்யா என்பவரின் உதவி கிடைத்தது. அதன்வழித் திண்ணைப் பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்தார். 1956இல் இடிகரை கிராமம் சென்ற அவர், அவ்வூரில் செய்யப்பட்ட சுதந்திர வித்யாலயம் என்ற உயர்நிலைப் பள்ளியில் விடுதிக் காப்பாளராகப் பணிபுரிந்தார். அவ்விடுதியில் குழந்தைகளுக்குக் காய்ந்த காய்கறிகளைச் சமைத்து வழங்குவதைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல் அதனைத் தொடர்ந்து எதிர்த்தார். இதன் காரணமாக அப்பணியிலிருந்தும் விலகினார்.

1956இல் கோவை சிங்காநல்லூரில் சிறிது காலம் கவிஞர் வாழ நேரிட்டது. அச்சமயத்தில் நவ இந்தியா என்ற நாளிதழில் மெய்ப்புத் திருத்துநர் பணியில் சேர்ந்தார். அங்குப் பணியாற்றிய பொழுதே, கவிதை, காவியம் என நிரம்பப் படைத்தார். அவ்விதழிலும் சில வெளியாயிற்று.1960இல் மெய்ப்புத் திருத்துநர் பணிக்கு ரூ.150 என நிர்ணயித்து அரசு சட்டம் இயற்றியது. கவிஞருக்குப் போதுமான பள்ளிப்படிப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தாலும் தாம் ஆற்றிய பணிக்கான ஊதியம் மறுக்கப்பட்டதாலும் கவிஞர் தனது சுயமரியாதை காரணமாக அங்கிருந்து வெளியேறினார்.

இவ்வாறு பல சூழல்களிலும் அலைக்கழிக்கப்பட்டு வந்தார். மனிதநேயமும், உண்மையும், அன்பும், கொண்ட கொள்கையில் உறுதியும், உள்ள அவரால் ஓரிடத்தில் நிலைத்து வாழ முடியவில்லை. வள்ளுவரின் மெய்நெறியையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு இறுதிவரை வாழ்ந்தும் காட்டியவர்.

கவிஞரின் படைப்புகள்

கவிஞரின் கவிதைகள் தமிழன், இந்துஸ்தான், வினோதன், அதர்மம், தமிழுலகம், மதுர மித்ரன், சேரநாடு, நவஇந்தியா, தியாகி, பிரசண்ட விகடன், ஈழகேசரி போன்ற பல்வேறு இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.

தொடக்கத்திலிருந்து 1948 வரை கவிஞர் எழுதிய கவிதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, தியாகி இதழ் ஆசிரியர் திரு.இராம சடகோபன் அவர்கள், பேராசிரியர் ஆ.சீனிவாச ராகவர், சிவாஜி இதழ் ஆசிரியர் திருயோக சீதாராம் மற்றும் வெண்ணைநல்லூர் திரு.வடிவேல் ஆகியவர்களின் பாராட்டுகளோடு இனிய கவி வண்டு என்னும் பெயரில் 22.9.1948இல் முதல் தொகுதி வெளியிடப்பட்டது.

1950இல் காஞ்சிபுரத்தில் அச்சிடப்பெற்ற எச்சரிக்கை என்னும் இரண்டாவது கவிதைநூல், கவிஞரின் துணைவியார் நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில் வறுமை காரணமாக நூலின் படிகள் அனைத்தும் கிலோ ரூ.6.50 என்ற விலைக்கு விற்க நேர்ந்ததன் காரணமாக நூல் ஆக்கம் பெறவில்லை. பின்னர் 1974இல் இனிய கவிவண்டு, எச்சரிக்கை என்னும் இருநூல்களில் உள்ள கவிதைகள் அனைத்தும் தாயகம் என்னும் பெயரில் வெளிவந்தது.

மரபு முறையில் கவிஞர் எழுதிய காவியங்கள் தொடர்ந்து வெளிவந்தவை. அவை:

1. கவிஞன் 1967

2. அறிஞர் 1977

3. தமிழன் 1979

4. பரிசு 1980

5. புரவலன் 19846. தலைவர்

7. துணைவி

8. துறவி கை எழுத்துப் பிரதிகளாக

கவிஞரின் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், கடிதங்கள், பத்திரிகைகளில் இடம் பெற்றவை (நவஇந்தியா). அமரகீதம், பொன்மொழிகள், மிர்தாத் என இவை அனைத்தும் அடங்கிய தொகுதி-2. 968 பக்கங்கள் ஆகும். இவ்விரு பெருந்தொகுப்புகளையும் காவ்யா திரு.சண்முக சுந்தரம் (சென்னை) அவர்கள் மிகுந்த அக்கறையோடு வெளியிட்டார்.

1991இல் கவிஞர் காலமான பிறகு, கவிஞரின் பேரனும், திருமதி நளினி அவர்களின் மகனுமான கோவை மகேந்திரன் அவர்களின் உதவியோடு கவிஞரின் சில படைப்புகள் பல வெளியீடாக நூலாக்கம் பெற்றன. அவை வருமாறு:

வெள்ளியங்காட்டான் கவிதைகள்

2005இல் கவிஞர் புவியரசு அவர்களின் பெருமுயற்சியால் வெளிவந்தது. இந்நூலுக்குத் திரு.மகேந்திரன் சிறப்பான முன்னுரை எழுதியுள்ளார். தனது தாத்தாவின் கவிதைகளைத் தமிழ் மக்களுக்கு அடையாளப் படுத்துவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறார். இந்நூலுள் புத்தகம் என்ற தலைப்பில் இடம்பெறும் புத்தகத்துள் தோய்ந்து புலன் கூர்மை யுற்றவனைச், சக்தியாய்க் காணும் சகம் என்ற புதுக்குறள் குறிப்பிடத்தக்கது.

கவியகம் (கவிதை) – இந்நூல் தமிழக அரசின் நிதி உதவியோடு வெளிவந்தது.
நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்
புது வெளிச்சம், தன்னைத் தான் அறிய ஆகிய இரு நூல்களும் 2007இல் வெளிவந்தன.
ஒரு கவிஞனின் இதயம் (கடிதங்கள்)(2007)
அறிநெறிக் கதைகள் (2007)
கவிஞன் என்பவன் (பன்முகப் பார்வை) – வெள்ளியங்காட்டான் படைப்புகள் குறித்துப் பல்வேறு அறிஞர்களின் கருத்துரைகள் அடங்கியது.

மேற்கண்ட அனைத்து நூல்களும் 2010இல் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன. இவரின் படைப்புகளைத் தமிழுலகம் இனியேனும் தன் நெஞ்சிலும் நினைவிலும் வைத்துப் போற்றும் என்று நம்புவோம்.

தன் மகளுக்கு எழுதும் ஒரு மடலில் கவிஞர் இவ்வாறு கூறுகிறார். செல்வந்தனாவது மிகவும் சுலபம். ஆனால் கவிஞனாவது மிகமிகக் கடினம். ஆயினும் நான் கவிஞனாக வாழ்வதையே விரும்புகிறேன். ஒரு கவிஞனாக வாழ்வதைக் காட்டிலும் உயர்ந்த வாழ்க்கை உண்மையாக வேறொன்றில்லை, என நான் உண்மையாகவே நம்புகிறேன். வாழ்க்கை என்பதுதான் என்ன…. ஆம். அது ஓர் இடையறாத முயற்சி. மனத்தில் அச்சமோ கவலையோ இன்றிச் சதா இயங்கிக் கொண்டே இருப்பதே வாழ்க்கை. அச்சமும், கவலையும் வாழ்க்கையைக் கோணலாக்கிவிடும் என்கிறார்.

23.9.46 அன்று தன் நண்பருக்கு எழுதிய மடலில் தமிழகத்தில் வறுமை என்ற நோய் தலைவிரித்தாடுகிறது. அந்நோயைத் தீர்க்கும் மருத்துவர்களும் இன்று தமிழகத்தில் இல்லை. என வருந்தி எழுதுகிறார். பழங்காலத் தமிழ்ச் சமூகத்தில் இந்நோயைத் தீர்க்கும் அரசர்களும் புலவர்களும் உலவிக் கொண்டிருந்தனர் என்ற செய்தி புறநானூற்றில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இதனை,

நமது மிக மிகப் பழங்கால நூலாகிய புறநானூறு என்னும் சங்க காவியத்தில் சில பேரிடம் இருந்ததாகத் தான் தெரிகிறது. அவர் யார் எனின், பாரி, காரி, ஓரி, பேகன், குமணன் என்ற பெயர்களால் விளங்கி வந்தவர்களே யாவர். இதில் பாரி என்பவருடைய மருந்து மிக மிக விசேசமானதாக இருந்ததாகவும் தெரிகிறது. அந்த மருந்தின் பெயர் கொண்ட என்பது தான் என்கிறார்

இறுதிக்காலம்

1991ஆம் ஆண்டில் 87ஆம் அகவையில் புற்றுநோய் காரணமாகக் கவிஞர் காலமானார். இவர் இன்று நம்மோடு இல்லை எனினும் அவர் நமக்கு விட்டுச் சென்ற காவியங்களும் பாவியங்களும் நமக்குள் வாழ்கின்றன. கவிஞரின் படைப்புகள் அனைத்தையும் இன்று உலகறியச் செய்த கவிஞரின் மகள் திருமதி வெ.இரா.நளினி அவர்களின் விடாமுயற்சியும் ஓயாத உழைப்பும், தந்தையின் மீதுள்ள பற்றும் வியக்கத்தக்கன. கவிஞரின் படைப்புகள் குறித்து காந்திகிராம பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் நா.மார்க்கண்டன் அவர்களின் பின்வரும் கருத்துச் சிந்திக்கத்தக்கது.

நன்றி -இர.ஜோதிமீனா

முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த் துறை,
அரசு கலைக்கல்லூரி,
கோயம்புத்தூர் – 18Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right