பார்வையாளர்களை கவரும் அமராவதி முதலை பண்ணை

 Friday, November 22, 2019  02:30 PM

உடுமலையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அமராவதி அணை. அங்கிருந்து கல்லாபுரம் செல்லும் வழியில், அமராவதி வனத்துறைக்கு உட்பட்ட பகுதியில் முதலை பண்ணை இயங்குகிறது. 5 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த பண்ணை, 1976-ல் தொடங்கப்பட்டது. அதில், 10 தொட்டிகள் உள்ளன.

100-க்கும் மேற்பட்ட நன்னீர் முதலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. முன்னர், இனப் பெருக்கம் காரணமாக ஏராளமான முதலைகள் உற்பத்தியாகின. ஒரு கட்டத்தில் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் சிரமப்பட்டனர். இதனால், கடந்த 20 ஆண்டுகளாகவே, அதன் இனப்பெருக்கத்தை கட்டுக்குள் வைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற் போது 100 முதலைகள் வரை உயிர் வாழ்வதாகக் கூறப்படுகிறது.

40 முட்டைகள்

இந்த வகை முதலைகள், 60 வயது வரை வாழும். முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இனத்தைச் சார்ந்தவை. ஆண்டுக்கு ஒரு முறை முட்டையிடும் பெண் முதலைகள், 30 முதல் 40 முட்டைகள் வரை இடும். மணலில் புதைத்துவைத்து குட்டிகள் வெளிவரும். முட்டையிடும் பருவம் கொண்ட முதலைகள், பாதுகாக்கப்பட்ட தொட்டிகளில் தனியாக விடப்படுகின்றன.

இருப்பினும், உணவுக்காக முட்டைகளையும், பிறக்கும் குட்டிகளையும் முதலைகள் தின்றுவிடும் பரிதாபம் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

இதுவும் ஒரு வகையில் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தக்கூடியவை தான் என்ற கருத்தும் நிலவுகிறது. அதேபோல், உணவிடும் நேரங்களில் இரை கிடைக்காத விரக்தியில், ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.இந்தப் பண்ணையில் இருந்து வனப்பகுதிக்குள் விடப்பட்ட ஏராளமான முதலைகள், அமராவதி அணை மற்றும் ஆற்றுப் பகுதிகளில் அதிக அளவில் வசிப்பதாகக் கூறப்படுகிறது.

அமராவதி முதலை பண்ணையை பார்வையிட, விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் பள்ளி, கல்லூரிகளில் இருந்தும் ஏராள மானோர் வருகின்றனர். இது, பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

300 கிராம் இறைச்சி

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, “சென்னை, திருச்சிக்கு அடுத்தபடியாக அமராவதியில் மட்டுமே அதிக அளவில் முதலைகள் உள்ளன. முதலைகளின் வயதுக்கேற்ப, தனித் தனி தொட்டிகளில் பராமரிக்கப்படுகின்றன. நிபுணர்களின் ஆலோசனைப்படி, 300 கிராம் எடையுள்ள இறைச்சி உணவாக அளிக்கப்படுகிறது.

அந்த வகையில், தினமும் 40 கிலோ மாட்டிறைச்சியும், 9 கிலோ மீனும் உணவாக அளிக்கப்படுகின்றன. இவை, தனியார் ஒப்பந்ததாரர் மூலமாக வழங்கப்படுகின்றன. திருப்தியாக உணவருந்தினால், ஒரு வாரம் வரை முதலை உணவின்றி வாழும். இந்தப் பண்ணையை அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் பார்வையிட்டுச் செல்கின்றனர்’ என்றார்.

அமராவதி பண்ணையில் முதலைகள் ரகம் அறிய புதிய வசதி :

1974ம் ஆண்டு முதல் இந்த பண்ணையை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். அமராவதி அணையில் இருந்து ஆற்றில் வெளியேறும் முதலைகள் பிடிக்கப்பட்டு இங்கு வளர்க்கப்படுகிறது. சிறிய குஞ்சுகள் முதல் 20 அடி நீள ராட்சத முதலைகள் வரை இங்கு உள்ளன. தற்போது 101 முதலைகள் பண்ணையில் உள்ளன. சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் இங்குள்ள முதலைகளை பார்த்து செல்கின்றனர். நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5 வசூலிக்கப்படுகிறது. முதலைகள் பற்றிய அரிய தகவல்களை தெரிந்து கொள்ளும்வகையில், பண்ணை சுவர்களில் தற்போது வனத்துறையினர் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். அதில் உலகம் முழுவதும் உள்ள முதலை ரகத்தின் பெயர், அதன் நீளம் உள்ளிட்ட அரிய தகவல்கள் படத்துடன் இடம்பெற்றுள்ளன. இதை சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2