வாங்க வால்பாறைக்கு ஒரு சிக்கன சுற்றுலா போவோம்.....

 Thursday, December 12, 2019  04:30 PM

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் மிக அருமையான சுற்றுலா தலமான வால்பாறை அமைந்துள்ளது. வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலைச் செடிகள் பயிரிடப்பட்டுள்ளன.

வால்பாறைக்குச் செல்லும் வழியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேலெனக் காட்சி தருவது தேயிலைத் தோட்டங்கள்தான். பொள்ளாச்சியில் இருந்து சுமார் 63 கி.மீ. தொலைவில் உள்ள வால்பாறைக்கு வனப்பகுதிக்குள்தான் சென்றாக வேண்டும்.

வால்பாறை துவங்கும் இடத்தில் ரம்மியமாகக் காட்சி தரும் ஆழியாறு அணை. அதற்கு அடுத்துக் குரங்கு அருவி. மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள். செல்லும் வழியில பல்வேறு ஆழியாறு அணையின் காட்சி முனை, தமிழ்நாட்டின் விலங்கு என கூறப்படும் வரையாடு, சிங்கவால் குரங்கு, யானை, மலை அணில், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளைப் பார்க்க முடியும்.

வால்பாறையில் மிக அதிக அளவில் சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும் அதிகமாக இவை வெளியில் தெரியவில்லை. அதனால் இங்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகத்தான் உள்ளது.

வால்பாறைக்கு ஏழாவது சொர்க்கம் (மிக அதிக மகிழ்ச்சி அளிக்கக் கூடிய இடத்தை இப்படித்தான் அழைப்பார்கள்) என்ற பெயரும் உண்டு. தமிழக அரசின் சார்பில் வால்பாறையைப் பிரபலப்படுத்துவதற்காக கோடை விழா நடத்தப்பட்டது. இதன் மூலம் வால்பாறையின் புகழ் வெளியில் பரவ வேண்டும் என்பதற்காக விழா நடந்தாலும் பயணிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரவில்லை. அதனால் தொடர்ந்து இங்கு வரப் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை.

மேலும் அடிக்கடி தேயிலைத் தோட்டங்களுக்குள் யானைகள் கூட்டம் கூட்டமாகப் புகுவதும், சிறுத்தைகள் வால்பாறை நகருக்குள் சுற்றுலா வந்து செல்வதும் வாடிக்கையாக நடக்கும் சம்பவங்கள்.

yt_middle

சோலையாறுஅணை : ஆசியாவில் மிக ஆழமான இரண்டாவது அணை. வால்பாறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அணை மிகவும் அழகானது. இங்கு தங்கிச் செல்ல பொதுப்பணித்துறையின் விருந்தினர் விடுதி உள்ளது.

சின்னக்கல்லார்அணை: இந்தியாவில் சிரபுஞ்சிக்கு அடுத்து மழை பெய்யும் இடம் இதுதான். வால்பாறையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அணைப்பகுதியில் அருவியொன்றும் உள்ளது. இந்த அருவியின் சத்தம் சிங்கம் உருமுவதைப் போல இருக்கும். இங்கு தங்கிச் செல்ல பொதுப்பணித்துறையினர் அனுமதி தேவை.

நீராறுஅணை: அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள இந்த அணை, பாசனம் மற்றும் மின்னுற்பத்திக்காகக் கட்டப்பட்டது. வால்பாறையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

அதிரப்பள்ளிநீர்வீழ்ச்சி: புன்னகை மன்னன் நீர்வீழ்ச்சி, இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படும் இந்நீர்வீழ்ச்சி கேரளப் பகுதியில் உள்ளது. வால்பாறையில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள இந்நீர்வீழ்ச்சிக்கு அடர்ந்த வனப்பகுதியின் நடுவில் சென்றாக வேண்டும். பல்வேறு வனவிலங்குகளையும் பார்க்க முடியும்.

புல்மலை: ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதிக்குள் அமைந்துள்ள இயற்கை விரும்பிகளுக்கு சொர்க்கமாகக் காட்சி தருகிறது புல்மலை. உலகின் வேறு இடங்களில் காணக்கிடைக்காத, இல்லாத புல்மலையைப் பார்ப்பதற்காக உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் இங்கு வந்து செல்கின்றனர். பச்சைப் புல்லை விரித்தாற்போன்ற புல்மலை - உலகின் அதிசயத்துக்கு எடுத்துக் காட்டு. இந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. தமிழக அரசு விலங்கான நீலகிரி வரையாடுகள் இங்கு அதிக அளவில் உள்ளன.

ஏழாவது சொர்க்கமான வால்பாறையைச் சுற்றிலும் 8 அணைகள் உள்ளன. வால்பாறையில் சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்படாததால் பலருடைய பார்வைகள் படாததால் சுற்றுச் சூழல் கெடவில்லை. அதனால் இயற்கைத் தாய் தொடர்ந்து பசுமை உடையை அணிந்து ஜொலித்துக் கொண்டிருக்கிறாள் என்பது நிதர்சன உண்மை. சுற்றுலாவை மேம்படுத்தினால் வேலை வாய்ப்பும் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை. வாய்ப்பு கிடைத்தால் வால்பாறைக்குச் சென்று வரலாம்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
Insta_right
mobile_App_right
Telegram_Side
fb_right