கொங்கு நாட்டுப்புறக்கலைகள் - ஓர் சிறப்பு பார்வை

 Tuesday, December 31, 2019  04:30 PM   No Comments

நாட்டுப்புறக்கலை என்றவுடனே முதலில் நமக்குத் தோன்றும் எண்ணம், அது கிராம மக்களின் கலை; பாமர/படிப்பறிவிலாத மக்களின் கலை என்பதாகவே இருக்கும். உண்மையில் நாட்டுப்புறக்கலை என்பது கிராமம் சார்ந்த கலை அல்ல. அது மக்கள் சார்ந்த கலை; மக்கள் குழு சார்ந்த கலை. சற்றே விரித்தால், அது மக்கள் குழு சார்ந்த அழகியல் கலை வடிவமாகும். நாட்டுப்புறம் என்பதை ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது கூட மக்களோடு தொடர்பு படுத்தி “FOLKLORE“ என்றே அழைக்கிறார்கள். (FOLK=மக்கள்/மனிதர்). நாட்டுப்புறக்கலைகளை இருவகையகப்பிரிக்கலாம்.

வாய்மொழி சார்ந்த கலைகள். (VERBAL), வாய்மொழி சாராத கலைகள். (NON-VERBAL) : தாலாட்டு போன்றவை வாய்மொழி சார்ந்தகலைகளில் அடங்கும். சடங்குகள் போன்றவை வாய்மொழி சாராத கலைகளில் அடங்கும்.

வாய்மொழி சாராத கலைகள் பற்றி இங்கு பார்ப்போம். இவ்வகைக் கலைகளில் சில பொருள் சார்ந்தவை. எடுத்துக்காட்டாக, கோலமிடுதல், பொம்மைகள் செய்தல் போன்றவை. சில கலைகள் நிகழ்கலைகள் என்னும் வகையில் சேரும். நிகழ்கலைகள் ஆங்கிலத்தில் PERFORMING ARTS எனச் சுட்டப்பெறும். நிகழ்கலைகளில், நிகழ்த்துகின்ற கலைஞர்களும் உண்டு; பார்வையாளர்களும் உண்டு. சில கூறுகளை அடிப்படையாக வைத்து நிகழ்கலைகளுக்குப் பெயரிடுதல் அமையும். காட்டாக, கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம் ஆகியன பொருள் மற்றும் கருவி சார்ந்த பெயர்கள் ஆகும்.

நிகழிடம் ஒரு கூறாகக் கொண்டது தெருக்கூத்து ஆகும். சில கலைகளின் பெயர் சாதியை அடிபடையாகக் கொண்டமையும். கொங்கில் நிகழ்த்தப்பெறும் அண்ணமார் கதை அவ்வகையானது. பறை போன்றவை இசைக்கருவியின் பெயர் கொண்டன. பாட்டுக்காகவும், அரங்கத்துக்காகவும் சில பெயர்கள் அமையும். சிலம்பாட்டம் (இது சலங்கையாட்டம் எனவும் வழங்கும்) என்பது பாட்டுக்கேற்ப ஆடும் கலை. கொங்கு நாட்டில் மட்டுமே சலங்கையாட்டம் காணப்படுகிறது. பத்து அல்லது பதினைந்து கிலோ எடையளவு நிறையச் சலங்கைகளைக் காலில் கட்டிக்கொண்டு பத்து அல்லது இருபது பேர் ஆடுவது சலங்கையாட்டம்.

கும்மி:

சங்க இலக்கியத்தில் கும்மி பற்றிய குறிப்புள்ளது. கொம்மைகொட்டுதல் என இலக்கியம் கூறுகிறது. கொம்மை, கும்மியாகத் திரிந்திருக்கலாம். சங்க இலக்கியத்தில் பேசப்பெறும் குரவை, கும்மியை ஒத்தது. கும்முதல், கும்மாளம் என்னும் சொற்களை நோக்குக. கும்மி, சில இடங்களில் கொண்டாங்கொட்டுதல், நன்னணா கொட்டுதல் என அழைக்கப்படுகிறது. தமிழகம் முழுமையும் கும்மி என்னும் ஆட்டக்கலை காணப்பட்டாலும், கொங்கு நாட்டில் அது தனித்தன்மையோடு விளங்குகிறது.

கும்மிக்கான எழுத்திலக்கியத்துக்கு வரையறைகள் உள. சீர்கள் ஏழு அல்லது எட்டு எனவும், இறுதிச்சீர் “விளங்காய்” எனவும் இருக்கவேண்டும். ஆனால், நாட்டுப்புறக்கும்மியில் வரையறை ஏதுமில்லை. கை கொட்டுதல், நகர்தல் ஆகியன கும்மியின் கூறுகள்.

நிலாச்சோறு படைத்துப் பகிர்ந்து உண்ணும் ஒரு நிகழ்வில் கும்மிக்குப் பங்குண்டு. பழநி தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக் காலங்களில் கும்மி தவறாது இடம்பெறும். கொங்குப்பகுதியில் விழாக்களை ”நோம்பி” (நோன்பு) என அழைப்பது மரபு. அது போன்ற ஒரு நோன்புதான் ”பட்டி நோம்பி” என்பது. அதிலும் கும்மி இடம்பெறுதலைக் காண்கிறோம்.
கொங்கில் “நோம்பி” என்பதை நெல்லையில் கொடை எனக்குறிப்பிடுகிறார்கள். கொங்கில் மார்கழித் திங்களில் வீட்டு வாசல்களில் சாணிப்பிள்ளையார் வைத்துக் கும்மியாடல் நிகழ்த்துவர். இதற்கெனத் தனியே பாட்டு உண்டு. ஒரு பாட்டு “வட்ட வட்டபிள்ளையாரே” எனத்தொடங்கும். அதுபோலவே, தைத் திங்களில் பூப்பொங்கல் என்றொரு நிகழ்வு; ஆற்றங்கரையில் கும்மி அடிப்பர். பாட்டு, ”ஓலையக்கா கொண்டையிலே” எனத்தொடங்கும். ”ஓலையக்கா” பாட்டு கொங்கு நாட்டின் தனிச்சிறப்பு.

மாரியம்மன் திருவிழாவின்போது தீமிதித் திருவிழாவும் நடைபெறும். இந் நிகழ்விலும் கும்மி அடிப்பர். மற்றுமொரு கும்மி சற்றே மாறுபட்ட ஒன்று. “இழவுக்கும்மி” என்னும் இது சாவுடன் தொடர்புள்ளது. (தமிழகத்தில் வேறு பகுதிகளில் காணப்படும் “மாரடிப்பாட்டு” என்பது வேறு.) கொங்கு நாட்டு அந்தியூரில் வாழைமரம் கொண்டு செய்த தேரினை நடுவில் வைத்துக் கும்மி அடிப்பர்.

ஒற்றைக்கும்மி, இரட்டைக்கும்மி என கும்மியாட்டத்தில் இருவகையுண்டு. கை கொட்டுதலில் மூன்று அடி ஒலித்தால் ஒற்றைக்கும்மி; இரண்டு அடி ஒலித்தால் இரட்டைக்கும்மி. இவ்விருவகைக் கும்மியாட்டங்களும் பெண்கள் ஆடுவன. ஆண்கள் ஆடுவன ஒயில்கும்மியும், வள்ளி கும்மியும் ஆம். பெண்கள் ஆடும் ஆட்டத்தில் ஆண்கள் இணைந்துகொள்வதுண்டு. ஆனால், ஆண்கள் ஆடும் ஆட்டத்தில் பெண்கள் இடம் பெறுவதில்லை.

பெண்கள் கும்மியில் சலங்கை மற்றும் இசைக்கருவி இல்லை. கும்மியில், வட்டமாக நகர்தல் மற்றும் வலப்புறமாக நகர்தல் ஆகியன குறிப்பிடத்தக்க கூறுகள். கொங்கு நாட்டில் தனித்துவமான கும்மிப்பாட்டு வள்ளிகும்மி ஆகும். கும்மிப்பாடல்களை ஒருவரே பலமணி நேரம் பாடுகிறார். பலமணி நேர அளவைக் கையாள அவர்கள் பின்பற்றுவது பாடல்களில் ஒரே பொருண்மையைத் திரும்பத்திரும்பச் சொல்லும் பாணி. திசைப்பெயர்களோ ஊர்ப்பெயர்களோ எண்ணுப்பெயர்களோ அடுத்தடுத்து வருமாறும் செய்தி ஒன்றாயிருக்குமாறும் பாடல்கள் அமையும். ஒரு கோழிக்குஞ்சைப் பிடித்தலையும் பிடித்த கோழியை அறுத்துக் குழம்பு வைப்பதையும் ஒரு கும்மிப்பாடல் வடிவில் நிகழ்த்திக்காட்டுவது மக்கள், கற்பனையைக் கலையாக மாற்றும் திறனன்றி வேறென்ன?

அண்ணன்மார் கதை :

கொங்குப்பகுதியில் சிறப்பாக நிகழ்த்தப்பெறும் கூத்து. வேளாளருக்கும் வேட்டுவருக்கும் இடையே நிகழ்ந்த ஒரு போராட்டமாக இக்கதை கருதப்படுகிறது. வலங்கை-இடங்கைப் போராகவும் இது நோக்கப்படுகிறது. நில உடைமையாளர்கள் வலங்கைப்பிரிவினராகவும் கைவினைக் கலைஞர்கள் இடங்கைப்பிரிவினராகவும் எண்ணப்படுகின்றனர். பெண்களின், குறிப்பாகத் தங்கையரின் துன்பியல் கதையாக இதைக்கொள்ளலாம். அண்ணன்மார் குலதெய்வமாகவும் காவல்தெய்வமாகவும் வணங்கப்பெறுகின்றனர். தெருக்கூத்துப்போலவே உடுக்கை அடித்தவாறும் கைதட்டியவாறும் நிகழ்த்தப்படுகிறது.

இறுதியாக, நாட்டுப்புறக்கலை பற்றி முதன்முதலாக ஆய்வு செய்து செய்திகளைக் கொங்குப்பகுதியில் வெளிக்கொணர்ந்தவர் கோவைக்கிழார் அவர்களே.
(முனைவர் சி.மா. இரவிச்சந்திரன் அவர்களின் சொற்பொழிவு)

கட்டுரையாக்கம்: து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை. அலைபேசி: 9444939156.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right