கோவையில் முதன் முதலாக பம்ப்செட்டை உருவாக்கிய பெருமை கொண்ட - நாராயணசாமி நாயுடு

 Saturday, March 14, 2020  04:30 PM

இன்றைக்கு கோயம்புத்தூரைச் சுற்றி கிட்டத்தட்ட அறுநூற்றுக்கும் அதிகமான ஃபவுண்டரிகளும், பெரிய அளவில் பம்புகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் நிறையவே இருக்க காரணமானவர்களில் முக்கியமானவர் நாராயணசாமி நாயுடு. பெரிய அளவில் படிக்கவில்லை என்றாலும், கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கோவையில் உருவான இன்ஜினீயரிங் தொழில் நாராயணசாமி நாயுடுவையும் ஒரு பிஸினஸ்மேனாக உருவாக்கியது ஆச்சரியம் தரும் வரலாறு.

பாப்ப நாயக்கன் பாளையத்தில்தான் நாராயணசாமி நாயுடு பிறந்தார். இவருடைய குடும்ப மும் விவசாயக் குடும்பம்தான். ஏறக்குறைய ஒரு சிறிய விவசாயியின் மகனாகவே பிறந்தார் நாராயணசாமி.

பள்ளிப் படிப்பு அவருக்குப் பெரிய அளவில் வாய்க்க வில்லை. என்றாலும், எந்த வேலையையும் சுறுசுறுப்பாகச் செய்யும் அவரிடம், எதைக் கொடுத்தாலும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துச் சேர்க்கும் இன்ஜினீயரிங் மூளை இருந்தது. இந்த அம்சங்கள்தான் அவரை ஒரு மெக்கானிக் ஆக்கி, கோவையில் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்னும் வெள்ளைக்காரர் நடத்திய கம்பெனிக்குள் கொண்டு போய்ச் சேர்த்தது. கோவையைச் சுற்றியுள்ள ஜின்னிங் தொழிற் சாலைகளுக்குத் தேவையான இயந்திரங்களுக்கான உதிரி பாகங்களை அமைத்துத் தந்து கொண்டிருந்தார் ராபர்ட் ஸ்டேன்ஸ்.

சில காலம் ராபர்ட் ஸ்டேன்ஸின் கம்பெனியில் வேலை பார்த்துவிட்டு, 1922-ல் புதிதாக ஒரு பட்டறையைத் தொடங்கினார் நாராயணசாமி நாயுடு. குன்னம்மா பட்டறை என்று மக்களால் அழைக்கப்பட்ட இந்த பட்டறையை லட்சுமி மில்ஸின் குப்புசாமி உள்பட ஆறுபேர் கூட்டு சேர்ந்து தொடங்கினர். கோவையைச் சுற்றி இருக்கிற டெக்ஸ்டைல் மில்கள், கரும்பு ஆலை ஆகியவற்றுக்குத் தேவையான உதிரிபாகங்களை தயார் செய்து தருவதே இந்த பட்டறையின் வேலை. காரணம், எவ்வளவு சிறிய உபகரணமாக இருந்தாலும் அதை இங்கிலாந்தில் இருந்து கொண்டு வரவேண்டிய கட்டாயம் அப்போது இருந்தது. ஆனால், பார்ட்னர்கள் எல்லோரும் ஏதோ ஒரு காரணத்தினால் பிஸியாகிவிட, குன்னம்மா பட்டறை அடுத்த சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது.

என்றாலும், வார்ப்புத் தொழில் (கேஸ்டிங் அண்ட் மோல்டிங்) பற்றி இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார் நாராயணசாமி. கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் மிகப் பெரிய ஃபர்னஸ் ஒன்று இருந்தது. இங்கே இரும்பு உருக்கப்பட்டு, மோல்டிங் செய்வதை நேரில் பார்க்க வேண்டும் என்று நினைத்த நாராயணசாமி நாயுடு நேராக அங்கு சென்று, அந்த தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொண்டார்.

இதன் பிறகு 1924-ல் தனியாக ஒரு கம்பெனியை ஆரம்பித்தார். நாராயணசாமி முருக பக்தர். பழனி முருகனின் பெயரையே, தான் தொடங்கிய புதிய கம்பெனிக்கு வைத்தார். சுருக்கமாக டி.பி.எஃப். என்று அழைக்கப்படும் தண்டாயுத பாணி ஃபவுண்டரி இன்றள விலும் கோவையில் பெயர் பெற்று விளங்குகிறது.

அப்போதுதான் கோவையில் பம்பு செட் தொழில்நுட்பம் அறிமுகமாகி இருந்தது. இந்த பம்புகளை ரிப்பேர் செய்வது அவற்றுக்குத் தேவையான சிறிய பாகங்களை உருவாக்கித் தருவது போன்ற வேலைகளையும் செய்து வந்தார் நாராயணசாமி நாயுடு. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் பம்பு பற்றிய தொழில் நுட்பத்தில் கை தேர்ந்தவரானார். நாமே பம்புகளை தயாரித்தால் என்ன என்கிற யோசனை நாராயணசாமியின் மனதில் தோன்றியது.

yt_middle

1928-ல் கோவையி லேயே முதன்முதலாக பெல்ட்டி னால் இயங்கும் பம்பைத் தயாரித்தார் நாராயணசாமி. அன்றைய சூழ்நிலையில் மரச் சட்டங்களை வைத்தே மோல்டிங் செய்து கொண்டி ருந்தனர். ஆனால், நாராயண சாமிதான் முதன் முதலாக இரும்புச் சட்டங்களை உருவாக்கி, மோல்டிங் செய்ய ஆரம்பித்தார். அவர் தயாரித்த பம்பு செட்டுகள் தரமிக்கதாக இருந்ததினால், இந்தியா முழுக்க ஆர்டர்கள் வந்து குவிந்தன. நாராயணசாமி நாயுடுவும் அவரது மகன் ராமசாமி நாயுடுவும் இணைந்து இந்த ஃபவுண்டரியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றிருந்தனர்.

ஆனால், 1940-ல் நாராயண சாமியும் அதனைத் தொடர்ந்து ராமசாமி நாயுடுவும் இறந்து போனது காலத்தின் கொடுமை. என்றாலும் நாராயணசாமியின் மற்ற புதல்வர்கள் தண்டாயுத பாணி ஃபவுண்டரியை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வந்தனர்.

1940-ல் நாராயணசாமி இறந்து போகிற சமயத்தில் கோவை, பம்பு செட்டுகளின் தலைநகரமாக ஆகி இருந்தது. முதல் முதலாக உருவான மோட்டார், முதல் முதலாக உருவான பம்பு செட்டு என்கிற இரண்டு விஷயம் சேர்ந்து கோவையை இந்தியாவின் முக்கிய வியாபார கேந்திரமாக மாற்றியிருக்கிறது. இன்றைய தேதியில் இந்தியா முழுக்க சுமார் 2,400 கோடி ரூபாய்க்கு பம்பு செட்டுகள் விற்பனையானது. இதில் கோவையின் பங்கு மட்டும் 1,200 கோடி ரூபாய்!

தண்டாயுத பாணி ஃபவுண்டரியில் தயாரான பம்பு செட்டுகள் இந்தியா முழுமைக்கும் சென்று கொண்டிருந்தது. 1960-ல் இந்தியா முழுக்க விற்பனையான பம்பு செட்டுகளின் எண்ணிக்கை 1.10 லட்சம். இதில் 22 ஆயிரம் பம்புகளை உருவாக்கித் தந்தது தண்டாயுத பாணி ஃபவுண்டரிதான். தவிர, 1950-களிலேயே ஈரான், ஈராக், குவைத் போன்ற பல்வேறு நாடுகளுக்கு பம்பு செட்டுகளை ஏற்றுமதியும் செய்து வந்தது இந்நிறுவனம்.

இந்த ஃபவுண்டரியில் வேலை பார்த்தவர்களே பிற்பாடு அதிலிருந்து பிரிந்து, புதிய ஃபவுண்டரிகளை உருவாக்கினார்கள். சுப்பையா ஃபவுண்டரி, விஜயா ஃபவுண்டரி, ராஜா ஃபவுண்டரி, கோபாலகிருஷ்ணா ஃபவுண்டரி உள்பட பல்வேறு ஃபவுண்டரி கள் உருவாகக் காரணமாக இருந்தது இந்த தண்டாயுத பாணி ஃபவுண்டரிதான்.

ஆனால், 1960-களில் கோவை யில் புதிய நிறுவனங்கள் பம்பு செட்டு உற்பத்தியில் கால் பதிக்கத் தொடங்கின. 1957-ல் கோவையில் சி.ஆர்.ஐ. பம்பு நிறுவனத்தைத் தொடங்கினார் கோபால் நாயுடு. முதலில் லட்சுமி மில்லிலும் பிறகு டெக்ஸ்டூல் கம்பெனியிலும் வேலை பார்த்த கோபால் நாயுடு, ஆரம்பத்தில் பம்பு செட்டுகளுக்கான வால்வுகளை மட்டும் தயாரிக்க ஆரம்பித்தார். பிற்பாடு விவசாயம், தொழில் துறைக்குத் தேவையான பல்வேறு பம்பு செட்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தார். இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் வெளிநாடுகளுக்கும் பம்புகளை தயாரித்தளிக்கிறது சி.ஆர்.ஐ. பம்பு நிறுவனம்.

தவிர, சுகுணா இண்டஸ்ட்ரிஸ், ஃபிஷர் பம்ப்ஸ், மஹேந்திரா பம்ப்ஸ் உள்பட பல கோவை நிறுவனங்கள் இன்று பம்ப் செட்டு உற்பத்தியில் பெயர் பெற்று விளங்குகின்றன.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
Telegram_Side
Insta_right
fb_right
mobile_App_right