குழந்தைகள் விடுமுறையை சந்தோஷமாக கழிக்க வழிகள்

 Saturday, March 14, 2020  05:30 PM

விடுமுறை என்பது மகிழ்ச்சியாக இருக்கத்தான் என்றாலும் அது உடலும் மனதுக்கும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எண்ணம்.

குழந்தைகளுக்கு விடுமுறை என்றால் கொண்டாட்டம்தான். காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டாம். வீட்டுப்பாடம் எழுத வேண்டாம். அவசரம் அவசரமாக குளிக்க வேண்டாம். ஸ்கூல் பஸ் வருவதற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டாம் இப்படி ஏராளமான வேண்டாம்கள். அதனால், தனக்குப் பிடித்தமான விஷயங்களில் மூழ்கிவிடுவார்கள்.

காலை எழுந்ததும் டிவியின் முன் அமரும் குழந்தைகள் சாப்பிடக் கூட எழுந்துச் செல்லவதில்லை. நிகழ்ச்சியின் இடைவேளையின்போதுகூட வேறொரு கார்ட்டூன் சேனலுக்கு மாற்றி, கார்ட்டூன் நிகழ்ச்சியைத்தான் பார்ப்பார்கள். டிவியைப் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் முழுமையாகவும் சாப்பிடுவதில்லை. டிவி பார்க்கும் பழக்கம் இல்லாத குழந்தைகளைப் பிடித்து வைத்திருப்பது மொபைல் போன்.

மொபைல் போனில் கேம்ஸ் விளையாடுவது, இணையதளம் பார்ப்பது, வாட்ஸ் அப்பில் உரையாடுவது என நேரத்தைக் கழிக்கிறார்கள். ஒரு நிமிடம்கூட மொபைல் திரையிலிருந்து கண்களை எடுப்பதில்லை. அந்த விளையாட்டில் வென்றாக வேண்டும் எனப் பதற்றத்துடன் இருப்பார்கள்.

விடுமுறை என்பது மகிழ்ச்சியாக இருக்கத்தான் என்றாலும் அது உடலும் மனதுக்கும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எண்ணம். பிள்ளைகள் டிவி, மொபைலில் மூழ்கியிருப்பதிலிருந்து விடுபட வேண்டும் என்றும் பெற்றோர் நினைக்கின்றனர். ஆனால், ஒரு விஷயத்தை மறந்துவிடுகின்றனர். பிள்ளைகள், அவர்கள் மிகவும் விரும்பும் ஒரு விஷயத்திலிருந்து விலக வேண்டும் என்றால், அதற்கு இணையான வேறு விஷயத்தைக் கொடுக்க வேண்டும் அல்லவா! பெற்றோர் அதற்கான திட்டமிடலைச் செய்ய வேண்டும். அப்போதே பெற்றோர் விரும்பும் மாற்றம் நிகழும். அதற்கான சில ஆலோசனைகள்.

காலை: பிள்ளைகள் காலை நேரத்தில் செய்தித்தாள் படிக்க வேண்டும் எனில், நீங்கள் முன்கூட்டியே செய்தித்தாளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். பிள்ளைகள் படிக்கக்கூடிய செய்திகளைச் சுற்றி வட்டமிட்டு, கார், விமானம் போன்ற அவுட் லைன் ஓவியத்தை வரைந்துவிட வேண்டும் அல்லது அந்தப் பகுதிகளைக் கத்தரித்து அதை கப்பல் அல்லது காற்றாடி வடிவமாக்கி பிள்ளைகளிடம் தர வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்யும்பட்சத்தில் அவர்களாகவே செய்தித்தாளை விரும்பிப் படிக்கும் மனநிலையை வந்தடைவார்கள்.


yt_custom
டிபன்: செய்தித்தாள் படிக்கும்போதே காலையில் என்ன டிபன் செய்யலாம் பிள்ளைகளோடு சேர்ந்து ஆலோசனை செய்யுங்கள். அவர்கள் விரும்பும் உணவு வகையைத் தேர்ந்தெடுப்பதுடன், அவர்களை உதவிசெய்யவும் அழையுங்கள். சப்பாதி என முடிவெடுத்தால், அதன் வடிவத்தை விதவிதமாக செய்யலாம் எனச் சொல்லுங்கள். ஸ்கூல் பஸ், பென்சில் பாக்ஸ், நண்பனின் முகம் போன்ற வடிவங்களில் சப்பாத்தி செய்யலாம் எனச் சொல்லும்போது ஆர்வத்துடன் வருவார்கள்.

ஷாப்பிங்: காலை உணவைப் போலவே மதிய உணவையும் பிள்ளைகளோடு சேர்ந்து முடிவுசெய்யுங்கள். அதற்கு தேவையான பொருள்களை வாங்கச் செல்லும்போது கூடவே அழைத்துச் செல்லுங்கள். ஒவ்வோர் இடம் பற்றியும் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைக் கூறுங்கள். வித்தியாசமாக ஏதேனும் பாக்க நேரிட்டால், அதை நன்கு கவனிக்கச் சொல்லுங்கள். வீட்டுக்கு வந்ததும் பார்த்தவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வரைந்துகாட்டுங்கள்.

சின்ன தூக்கம்: மதிய உணவுக்குப் பிறகு சிறிதுநேரம் தூங்க வையுங்கள்.

மீட்டிங்: மாலை நேரத்தில் பிள்ளையை வெளியே அழைத்துச் செல்லுங்கள். வெளியில் செல்வது பிள்ளைகளுக்காக மட்டுமே. அப்படியே உங்களின் வேறு வேலையையும் முடித்துவிட்டு வரலாம் எனத் திட்டமிடாதீர்கள். வழக்கமாகச் செல்லும் பூங்கா, கடற்கரை, கோயில் என இல்லாமல் பிள்ளைகளுக்குப் பிடித்த விஷயமாக இருக்கட்டும். அறிவியலில் ஆர்வமாக இருக்கும் பிள்ளைகளை அது தொடர்பாக இருக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். ஓவியம் வரைவதற்கு ஆர்வமிருக்கும் பிள்ளைகளை உங்கள் ஊரில் உள்ள ஓவியரிடம் அழைத்துச் செல்லுங்கள். இல்லையென்றால் பிள்ளைகளின் நண்பர்களின் வீட்டுக்குச் செல்லுங்கள். அடுத்த விடுமுறை தினத்தில் அவர்களை உங்கள் வீட்டுக்கு அழையுங்கள்.

இரவு: கதைக் கேட்க விரும்பும் குழந்தைகள் எனில் புதிய கதைகளைக் கூறுங்கள். புதிய புத்தகங்களைப் படித்துக்காட்டுங்கள். வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு கதை ஒன்றைத் தயார் சொல்லுங்கள். தயங்கினால் நீங்களே உருவாக்கிக்காட்டுங்கள். சினிமா, அரசியல், கலை, உறவு பற்றிய விஷயங்களை உரையாடுங்கள். அவர்களின் கருத்துகளை இடைமறிக்காமல் முழுமையாகக் கூறச்செய்யுங்கள். நீங்கள் பார்க்காத கோணத்தில் ஒரு விஷயத்தை பிள்ளைகள் அணுகியிருந்தால் மனதாரப் பாராட்டுங்கள்.

இவைத் தவிர இடையிடையே 10 அல்லது 15 நிமிடங்கள் தொலைக்காட்சி பார்க்கவும் அனுமதியுங்கள். மொபைலில் பேசச் சொல்லுங்கள். தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது அறிவுரையாகக் கூறாமல் இயல்பாகப் பழக அனுமதியுங்கள்.

இவற்றையெல்லாம் படிக்கவும் பேசவும் நன்றாக இருக்கும் ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை என்கிற எதிர்மறையான சிந்தனை இருந்தால் உடனடியாகக் கைவிடுங்கள். பெரிய மாற்றத்தின் தொடக்கம் சிறிய விஷயமாகவே இருந்திருக்கும். தொடர் பயிற்சியினாலே அது சாதிக்கப்பட்டிருக்கும். குழந்தை வளர்ப்பில் மாற்றங்களை உடனடியாகக் காண முடியாது. ஆனால், பிள்ளைகள் வளர வளர அவற்றை உணர முடியும்.


yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
fb_right
Insta_right
mobile_App_right
Telegram_Side