கோவை தீத்திபாளையத்தில் ஒரு சாதனை மாணவி - அனுஷா

 Sunday, March 15, 2020  02:30 PM  1 Comments

சாதிப்பதற்கு வசதியோ வயதோ ஒரு தடையாக இருப்பதில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் கோவை தீத்திபாளையத்தில் உள்ள ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஆனந்தன், ஜெயந்தி தம்பதியர்களின் மகளான 15 வயது சிறுமி அனுஷா பவித்ரா ஸ்ரீ. இவர் ஒரு அரசு பள்ளி மாணவியாக படிப்பில் முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் , அப்பள்ளியின் கதாநாயகியாக உலாவருவதோடு நமது தமிழ் கலாச்சார கலைகளை தன் கைவசப்படுத்தி வைத்திருக்கிறார்.

பரதம், அம்மன் நடனம், கரகாட்டம், பறை போன்றவை நம் பாரம்பரிய கலைகள் தான் என்றாலும், நடுத்தர மக்கள் எல்லாம் இந்த கலைகளை ரசிப்பதோடு மட்டும் தான் இருக்க முடியும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அப்படியே கற்றுக்கொள்ள விரும்பினாலும் இந்த கலைகளை கற்றுத்தரும் ஆசிரியர்களும் மிகவும் குறைவு. இதனாலேயே தற்போது இந்த பாரம்பரிய கலைகள் முற்றிலும் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஆண்டவனின் வரபிரசாதமாக அனுஷா எந்த குருவிடமும் பயிலாமல் இயல்பாகவே நாட்டுப்புற நடனம் போன்ற அனைத்து கலைகளிலும் கை தேர்ந்து விளங்கினார் என்றால் மிகையாகாது.

அனுஷா 6 வயது முதல் தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களில் வரும் நடனக்காட்சிகளை மட்டுமே கவனித்து அந்த வயது முதலே பள்ளிகளிலும் , விழாக்காலங்களில் தெருக்களிலும் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதோடு மட்டுமல்லாமல் தவறாமல் ஒவ்வொரு முறையும் முதல் பரிசை வென்று வந்துள்ளார். இதனை தொடர்ந்த கவனித்த பலரும் அவருக்கு முறையாக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யும்படி அனுஷ்யாவின் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். அதை தொடர்ந்து அவரது ஆர்வத்தை உணர்ந்த பெற்றோர் அவருக்கு முறையாக அனைத்து கலைகளிலும் பயிற்சி அளித்துள்ளனர்.

சரஸ்வதி நாட்டிய பள்ளியில் முரளி என்ற ஆசிரியரிடம் முறையாக நடனம் கற்றுக்கொண்டுள்ளார். பள்ளி நடன நிகழ்ச்சிகளிலும் இவர் முதல் இடத்தை பிடித்து வருகிறார். தொடர்ந்து 5 வருடங்களாக மாவட்ட அளவிலான கிராமிய கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முதல் இடத்தை மட்டுமே பிடித்து வருகிறார். இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இவரது குடும்பத்தில் இதற்கு முன் யாருமே இது போன்ற நடன கலை பழகியவர் இல்லை.

கரகாட்டத்தின் முக்கிய அம்சமாக திகழ்வது சாகசத்தோடு கூடிய நடனம் தான். அதாவது ஆணி, கத்தி ஆகியவற்றின் மேல் நடனம் புரிவது, கண்ணாடி குவளை மற்றும் ஒற்றை தம்ளரின் மேல் நின்று நடனம் ஆடுதல் இப்படி. இதில் எல்லாவற்றிலும் கைதேர்ந்த அனுஷ்யா தொடர்ந்து 45 நிமிடம் விடாமல் கரகாட்டம் ஆடிக்கொண்டே இறுதியில் தரையில் இருக்கும் குண்டூசியை விழி இமையில் எடுத்து காட்டி பார்ப்பவர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துவிடுவார் .

yt_custom

அனுஷா நடனத்தில் சாதித்தது மட்டுமல்லாமல் அன்னை கலைக்கூடம் மூலம் நடிப்பும் கற்று வருகிறார். மேடை பல கண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரது திறமை கண்டு பலரும் இவருக்கு ஊக்கமும் உதவியும் வழங்கி வருகின்றனர். உதவியாக வந்த நிதியைக் கொண்டு இவரது தாய் ஜெயந்தி அன்னை கலைக்கூடம் மூலம் அனுஷாவை வைத்து “அரசுப்பள்ளி” என்ற குறும்படம் ஒன்றை தயாரித்தார். இந்த குறும்படம் கோவையில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக காட்டப்பட்டுள்ளது. நல்ல வரவேற்பைப் பெற்ற 'அரசுப்பள்ளி' குறும்படம் பார்த்த இயக்குனர் பேரரசு தனது அடுத்த படத்தில் இவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு அளிப்பதாக கூறியிருக்கிறார்.

இவர் கலைஞர் டிவியின் “ஓடி விளையாடு பாப்பா” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றிருக்கிறார். மேலும் கேரளாவின் “மலர்விழி மனோரமா” டிவி யின் 1+1=3 மற்றும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றிருக்கிறார். இதுவரை இவர் எதிலும் இரண்டாவது பரிசைகூட வென்றதில்லை, எல்லாவற்றிலுமே முதல் பரிசு மட்டுமே தான்.

பொருளாதாரத்தில் சொல்லும்படியான வசதி இல்லாத போதும் இவரது ஆர்வத்தை கண்டு இவரது பெற்றோர் தங்களால் முடிந்தவரை இவருக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். இவர் தாய் ஜெயந்தி, “என் மகளுக்கு இயற்கையாகவே இப்படி ஒரு திறமை அமைந்திருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த சாதனைகளோடு அவள் படிப்பிலும் கெட்டிக்காரியாக இருந்து வருகிறாள்” என்று பெருமிதத்துடன் கூறினார்.

' கலையையும் வளர்க்கணும் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தணும் ' மேல் நாட்டு மோகத்தில் நம் கலாச்சாரத்திற்கு சற்றும் ஒத்துவராத நடனங்களை மக்கள் மத்தியில் முகம் சுளிக்கும்படி ஆடுபவர்கள் தான் இக்காலத்தில் அதிகம். அனுஷா, அவரது பெற்றோர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் நம்நாட்டின் கலாசாரத்தை பறைசாற்றும் இது போன்ற கலைகளை அரசாங்கம் மட்டுமல்லாமல் மக்களும் ஊக்கப்படுத்தவேண்டும் என்பதே. இதற்காக நாம் பெரியதாக எதுவும் செய்யவேண்டியது இல்லைங்க நம்முடைய வீட்டில் நடக்கும் சுபகாரியங்களுக்கும் , கல்லூரி மற்றும் பள்ளி கலை விழாக்களிலும் இது போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்தாலே போதும். அவ்விழாக்களில் அனுஷா போன்ற இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கலாமே..!

~மகேந்திரன்


yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


D Krishnankumar D Krishnankumar commented on 3 week(s) ago
நடன கலையில் தொடர்ந்து வெற்றி பெற நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Subscribe to our Youtube Channel


Twitter_Right
Insta_right
fb_right
mobile_App_right
Telegram_Side