ராஜ வீதி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் - ஒரு பார்வை

 Tuesday, March 17, 2020  03:19 PM   Array comment(s)

கொங்கு மண்டலம் மைசூர் அரசருடைய நேரடி நிர்வாகத்திலும், அவர்களது அரசு பிரதிநிதிகளின் நிர்வாகத்திலும் இருந்தது. அதன் பின்னர் மதுரை நாயக்க மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. இந்த கால கட்டத்தில் அவர்கள் தங்களுக்கு ஆடை நெய்து அளிப்பதற்காக நெசவாளர் குடும்பங்களை தலைநகரையும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் குடியமர்த்தினர்.

கொங்கு மண்டலம் நிர்வாக வசதிக்காக 24 நாடுகளாக பிரிக்கப்பட்டது. கோவை நகரம் மற்றும் அவ்வூரைச்சுற்றியுள்ள கொங்கு மண்டலத்தின் ’ஆறை நாடு’ என்னும் பகுதியில் 415 ஆண்டுகளுக்கு முன் குடியேறிய தேவாங்கர்கள் தங்கள் குல தெய்வமான ராமலிங்க சவுடாம்பிகை அம்மனுக்கு கோவில் கட்டி வழிபட விரும்பி ஊரின் நடுவே ராஜ வீதியில் சிறிய அளவில் கோவில் கட்டினர். விநாயகர் ராமலிங்கேஸ்வரர், சவுடாம்பிகை அம்மன் ஆகிய மூல விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர்.

அதன் பின்னர் சிறிய சவுடாம்பிகை அம்மன் உற்சவ மூர்த்தியை ஐம்பொன்னில் வார்த்து உற்சவங்களும் நடத்தி வந்தனர். கடந்த நூற்றாண்டின் மத்தியில் தற்போதுள்ள ’சபா மண்டபம்’ பிரகாரங்கள், பரிவார மூர்த்தங்கள், திருமதில் மற்றும் அறுபத்து மூவர் சந்நிதிகளை அமைத்து ஐந்து நிலை ராஜகோபுரமும் கட்டினர்.

கோவிலின் மகா மண்டபத்தில் அமைந்துள்ள 8 தூண்களில் பல அர்த்த சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதில் தர்த்தன வினாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேதர சுப்பிரமணியர், மகாவிஷ்ணுவின் தசாவதாரத் திருவுருவங்கள் மகிஷாசுர மர்த்தினி, திருமூர்த்தி (தத்தாத்ரேயர்) நாகபந்தனத்தோடு கூடிய சிவலிங்கம், காமதேனு, கற்பகவிருஷம் ஆகியவை வேறெங்கும் காணக்கிடைக்காத அபூர்வ சிற்பங்களாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவில் திருப்பணி செய்து சனீஸ்வரர் ஸ்ரீசப்தமாதாக்கள், ஸ்ரீகாயத்திரி தேவி அஷ்டலட்சுமிகள் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தனி சன்னதிகள் நிர்மானிக்கப்பட்டது.

yt_middle


ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் கொடிமரம் முன் வாசலில் துவார பாலகர்கள் உள்ள மண்டபத்தின் மேற்கூரையில் கல்லினால் செதுக்கப்பட்ட சூரிய, சந்திர கிரகணங்கள் உள்ளதால் இக்கோவிலில் பரிகாரங்கள் செய்யும் பரிகாரஸ்தலமாக போற்றப்படுகிறது.

விழாக்கள் :

கோவிலில் நித்தியப்படி 4 கால பூஜைகளும், பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை, வைகாசி விசாகம், வருடப்பிறப்பு நால்வர் குரு பூஜை ஆகியவை அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆடி வெள்ளிக்கிழமைகளில் சுவாமி, அம்மன் ஊஞ்சல் உற்சவமும் ஆவணி அவிட்டம், நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி கேதார கவுரி நோன்பு, ஐப்பசி பவுர்ணமி அன்று சிவனுக்கு அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், மகா சிவராத்திரி ஆகிய உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

ஆண்டுக்கொரு முறை நவசண்டிகா ஹோமம், வருஷோற்சவம் திருக்கல்யாணம் திருவிளக்கு வழிபாடு ஆகியன சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. விசேஷமாக நவராத்திரி ஒன்பது நாட்களும் சுவாமி, அம்மன் நாளரு அலங்காரமாக கொலு வைத்து, பத்தாம் நாள் விஜயதசமியன்று அம்மனின் அம்சமாக விளங்கும் ’பாகு’ எனப்படும் உடைவாளை திருமஞ்சனக் குடத்தில் வைத்து அதை குல மக்களின் சிரசு மீது வைத்து குல மக்கள் நீளமான கத்திகளை கைகளில் ஏந்தி தம் மார்பின் மீதும் தோள்களின் மீதும் சாற்றிக்கொண்டு உடலில் இருந்து வெளிப்படும் ரத்தத்தையே அன்னைக்கு அர்ப்பணித்து பக்தி சிரத்தையுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வருவர். பின்னர் உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சன நீராட்டி மாலையில் சுவாமி அம்மன் புறப்பாடு நடைபெறும்.

பின்னர் அசுரனை சம்ஹாரம் செய்யும் ஐதீகப்படி வாழை மரத்தை வெட்டி, பின்னர் கோவிலுக்கு திரும்புவர். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் ஏழை பெண்களுக்கு இலவச திருமணம் கோவில் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


Nanthakumar Nanthakumar commented on 2 month(s) ago
கோவை ராஜ வீதியில். அமைந்திருக்கும் ஸ்ரீ ராம லிங்க செளடாம்பிகை அம்மன் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புகள் சிறப்பாக கொடுத்த உங்களுக்கு நன்றி. மேலும் ஒவ்வொரு அமாவாசை அன்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கின்றேன்.
Subscribe to our Youtube Channel

Telegram_Side
mobile_App_right
Insta_right
Twitter_Right
fb_right