வட இந்தியாவில் கோலோச்சிய முதல் தமிழக கலைஞர் - பொள்ளாச்சி ராஜா சாண்டோ

 Saturday, March 21, 2020  06:30 PM   No Comments

அக்காலத்தில் திரைப்பட தயாரிப்புகளுக்கு முக்கிய கேந்திரமாக சென்னை விளங்கியது. இந்திய அளவில் புகழ்பெற்றிருந்த கலைஞர் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னையில் முகாமிட்டு தங்கள் படைப்புகளை உருவாக்கிக்கொண்டிருந்தார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக பம்பாயும், கல்கத்தாவும் சினிமா தயாரிப்புகளுக்கு உகந்ததாக விளங்கியது. திரைப்பட தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப காரணங்களுக்காக பம்பாய், கல்கத்தா என அக்காலத்தில் கலைஞர்கள் உழலவேண்டியிருந்தது. அப்படி பம்பாய் செல்லும் தமிழக கலைஞர்களுக்கு நெருடலான ஒரு விஷயம் உண்டு. அது அங்குள்ளவர்கள் அவர்களை 'சாலா மதராஸி' என அழைத்து கேலி செய்வது. தமிழர்கள் என்றால் அத்தனை இளக்காரம் பம்பாய் ஸ்டுடியோவாசிகளுக்கு.

மும்பைவாசிகளின் இந்த கேலி வார்த்தை சென்னையிலிருந்து செல்பவர்களை மிகுந்த எரிச்சலாக்கும். ஒருமுறை தமிழக கலைஞர் ஒருவர், மும்பைவாசி ஒருவரால் இப்படி அவமானப் பட்டதை நேரில் கண்டார் ஒரு மனிதர். குஸ்திக்கலைஞரும் விளையாட்டு வீரருமான அந்த மனிதர், கிண்டல் செய்த அந்த மும்பைவாசிக்கு தன் பாணியில் பதில்கொடுத்துவிட்டு, உக்கிரமான குரலில், “ பம்பாய் ஸ்டியோகாரர்கள் இனி 'சாலா மதராஸி' என்று தமிழன் எவனையும் பார்த்து விளிக்கக் கூடாது” என்றார். அன்றோடு சென்னைவாசிகளை கேலி செய்வது நின்றுபோனது. அதன்பின் தமிழக கலைஞர்களுக்கு பம்பாயில் உரிய மரியாதை கிடைத்தது.

தமிழருக்கு நேர்ந்த அவமானத்தை போக்கி மரியாதை கிடைக்கச் செய்த அந்த மனிதர் வேறு யாருமல்ல..... ராஜா சாண்டோ.

சிறந்த டைரக்டர், திறமையான நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் விளங்கி, வட இந்தியாவில் தமது திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுப் பெற்ற முதல் தமிழர். ஊமைப்படங்களிலும், பேசும் படங்களிலும் சிறப்பாக நடித்து புகழ்பெற்றவர்.

சிறந்த விளையாட்டு வீரராகவும், குஸ்தி சாம்பியனாகவும் விளங்கிய ராஜா சாண்டோ, 1895 ம் வருடம் பொள்ளாச்சியில் பிறந்தார். இவரது நிஜப்பெயர் நாகலிங்கம். டைரக்டராகவும், சிறந்த வசனகர்த்தாவாகவும் பன்முக ஆற்றலுடன் விளங்கிய ராஜா சாண்டோ, 1915 -ல் தம் இருபது வயதில் சென்னை வந்தார். தேகப் பயிற்சி காட்சிகளை வட சென்னையில் சில காலம் நடத்தினார். சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் தனது அற்புதமான தேகப்பயிற்சி காட்சிகளை நடத்தி, மிக பிரபலமாக விளங்கினார்.

சென்னை மட்டுமின்றி நாகப்பட்டணம், தஞ்சாவூர், ஈரோடு உள்ளிட்ட பல முக்கிய நகரங்களிலும் அவரது காட்சிகள் நடந்தன.

ஒருமுறை கொல்லங்கோடு அரண்மனைக்குச் சென்ற சாண்டோ, அங்கு விஜயம் செய்திருந்த பரோடா மன்னருக்கு தேகப் பயிற்சி காட்சிகளை நடத்திக் காட்டினார். சிறிய வயதில் அவரது திறமையை பாராட்டிய மன்னர், ஆயிரம் ரூபாய் சன்மானமாக கொடுத்து சாண்டோவை கவுரவித்தார். 1000 ரூபாய் என்பது அக்காலத்தில் பல லட்சங்களுக்கு சமம். பின்னர் மங்களூரில் சில காலம் தேகப்பயிற்சிகளை நடத்தினார்.

தம் இருபதாவது வயதில் பம்பாய் வந்த சாண்டோ, பிரபலமான நேஷனல் பிலிம் கம்பெனியில் சேர்ந்தார். இந்த நிறுவனம் 'பக்தபோதனா' என்ற மௌனப்படத்தை தயாரித்தது. இதில் ரூ.101 சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்தார். இதுதான் ராஜா சாண்டோ நடித்த முதல் திரைப்படம்.

ஊமைப்பட காலம் எனப்பட்ட அந்நாளில், சலனப்படங்களின் டைட்டில் கார்டில், படத்தை தயாரித்த கம்பெனியின் பெயரும், அதை இயக்கிய டைரக்டர் பெயரும்தான் காட்டப்பட்டு வந்தன.

ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்குகிற நடிக, நடிகைகள் இப்படி புறக்கணிக்கப்படுவது ராஜாசாண்டாவுக்கு எரிச்சலை தந்தது. தன் ஒரு படத்தில், அதன் தயாரிப்பாளரான பம்பாய் முதலாளியோடு இதுகுறித்து வாதித்து போராடி, அந்த படத்தின் டைட்டில் கார்டில் நடிக, நடிகைகளை பெயர்களை இடம்பெறச் செய்தார். அதைத்தொடர்ந்து இந்திய மொழிப்படங்களில் நடிக, நடிகையர் பெயர் தவறாமல் இடம்பெற ஆரம்பித்தன. இப்படி தன் சக கலைஞர்களின் மீது அளவற்ற அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார் சாண்டோ.

பம்பாய், ரஞ்சித் பிலிம் கம்பெனியில் சேர்ந்து திரையுலகில் தீவிரமாக இயங்கிவந்த சாண்டோ, அங்கு திரையுலகின் நுணுக்கங்களை நன்கு அறிந்துகொண்டார். தன் திறமையையும் ,அனுபவங்களையும் கொண்டு, ஆரம்ப நிலையிலிருந்த தமிழ்ப் பேசும் படத்துறையை வளர்த்தெடுக்க ராஜா சாண்டோ விரும்பினார். 1931-ம் ஆண்டு வெளிவந்த முதல் தென்னக சினிமாவான 'காளிதாஸ்', முழுமையான ஒரு தமிழ் படமாய் அமையவில்லை என்ற எண்ணம் அவர் மனதில் உறுத்திக்கொண்டிருந்ததே அதற்கு காரணம்.

பரிசோதனை ரீதியில் எடுக்கப்பட்ட ஒரு பன்மொழித் தொகுப்பாக அப்படம் உருவாகியிருந்தது. சென்னை வந்த ராஜா சாண்டோ, தமிழில் சில படங்களை டைரக்ட் செய்தார்.

நாற்பதுகளில் பரபரப்பாகப் பேசப்பட்ட படம் 'சவுக்கடி சந்திரகாந்தா'. அதில் பண்டார சந்நதியாக நடித்தவர் காளி என்.ரத்தினம். பண்டார சந்நதிக்கு பல ஆசை நாயகிகள் இருந்தனர். அதில் ஒருத்தி ஆங்கில அழகி. அவளுக்கு தமிழ் தெரியாது. காளி என்.ரத்னத்திற்கோ ஆங்கிலம் தெரியாது. அவள் தமிழ்ப் பேச்சு புரியாமல் 'ஓ காட்' என்று தலையில் அடித்துக் கொள்கிறாள். காளி என். ரத்னம், ஆள் பேசுவது புரியாமல் 'பாவம், தலைவலி போலிருக்கிறது' என்று நினைத்து 'அமிர்தாஞ்சனம் வேண்டுமா', நெற்றியில் தேய்த்துவிடவா?' என்கிறார். அர்த்தம் புரியாமல் பேசும் அவரைப் பார்த்து, அவள் வாய்விட்டுச் சிரிக்க வேண்டும். இது அன்றைய காட்சி.

படமாக்கும் போது அந்த நடிகைக்கு சிரிக்கவே வரவில்லை. டைரக்டர் ராஜா சாண்டோ எவ்வளவு விளக்கியும் பயன் ஏற்படவில்லை. அவர் திடீரென்று ஏதோ நினைத்தவராய், 'ரெடி, ஸ்டார்ட்' என்றவர், காமிராவுக்குப் பின்னால் நின்றபடி தன் கால் செருப்புகளை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு 'தை தை' என்று கூத்தாடினார். இதைப் பார்த்த அந்த ஆங்கில அழகி கை கொட்டிச் சிரித்தாள். அந்தக் காட்சி சிறப்பாகப் படமாக்கப்பட்டது. அந்தப் படத்தில் குண்டூர் இளவரசராக நடித்தவர் பி.யு.சின்னப்பா.

'இப்படித்தான் என் குருநாதர் டைரக்டர் ராஜா சாண்டோ அவர்கள் நடிக்கத் தெரியாதவர்களையும் தனது சமயோசித யுக்தியால் சிறப்பாக நடிக்க வைத்து விடுவார். அவர் ஒரு பிறவி மேதை' என்று புகழ்ந்து பேசினார் நடிகர் பி.யு.சின்னப்பா. டைரக்டர் ராஜா சாண்டோ படமாக்கும் பாங்கும், நடிக, நடிகைகளிடம் பழகும் பண்பும் எல்லோராலும் பாராட்டப்பட்ட காலம் அது. இருவருமே குஸ்தி, சிலம்பம் போன்ற வீர விளையாட்டுக்களில் தீரர்கள். திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவர்கள்.

பின்னர், துவாரகாதாஸ் நாராயணதாஸின் கோஹினூர் பிலிம் கம்பெனியில் ஒப்பந்தம் செய்துகொண்டு, கம்பெனி படங்களில் நடித்தார். சில காலம் சென்ற பின் 'மெஜஸ்டிக் பிலிம்' கம்பெனியாரின் படமான 'ரஷியாபேகம்' என்ற மௌனப் படத்தில் நடித்தார். 'எக்பால்' என்ற கதாநாயகியுடன் 'இரவு லீலைகள்' (Midnight Romance) என்ற படத்தில் கதாநாயகனாக ராஜா சாண்டோ நடித்தார்.

படப்படிப்பு தளங்களில் ராஜா சாண்டோ ஒரு கறாரான மனிதர். தான் விரும்பியபடி காட்சி சிறப்பாக வரும் வரையிலும் நடிகர்களை உண்டு இல்லையென்று செய்துவிடுவார். அந்த சமயங்களில் அவர்கள் ராஜா மீது கடும் எரிச்சல் அடைவார்கள். ஆனால் காட்சி திரையில் வரும்போது அவர்கள் ராஜா சாண்டோவின் திறமையை எண்ணி வியப்பிலாழ்ந்துவிடுவர்.

இந்த காரணங்களால் பி.யு சின்னப்பா மட்டுமின்றி மக்கள் திலகம் எம்.ஜி. ஆரும் அவரை தன் குரு என போற்றினார். என் திரைப்படங்கள் ராஜா சாண்டோ பாணியை பின்பற்றியது என ஒருமுறை குறிப்பிட்டார் எம்.ஜி. ஆர்.

சாண்டோ அவருக்கு மிகவும் பிடித்தமான டைரக்டர், நடிகர், தயாரிப்பாளர். சாண்டோவை அவரது ஒவ்வொரு கோணத்திலும் ரசித்து சிலாகித்தவர் எம்.ஜி.ஆர்.

தமிழ்சினிமாவிற்கு பெரும்பங்களிப்பு செய்த சாண்டோவிற்கு, நாடகங்கள் பிடிக்காது என்பது ஆச்சர்யமான தகவல். புராதன, இதிகாச கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு அரதப்பழசான விஷயங்களை முன்னிறுத்துவதாக கருதிய அவர், திரும்ப திரும்ப அத்தகைய தகவல்களை காட்சிகளாக்குவதை வெறுத்தார். சமூக படங்களின் மீது அவருக்கு இருந்த ஆர்வம், புராண நாடகங்களின் மீது எரிச்சலை ஏற்படுத்தியது.

ஒருமுறை பிரபல நாடக கலைஞர் எஸ். ஜி. கிட்டப்பா இவரை சந்திக்க அனுமதி கேட்டு, நாடக நடிகர் என்ற ஒரே காரணத்திற்காக அவரை சந்திக்க மறுத்தார் என்ற தகவல் சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு நாடகங்களின் மீது வெறுப்பு கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்திய திரையுலகிற்கு ராஜா சாண்டோ பங்களிப்பு செய்த மேலும் பல படங்கள்...

(மௌனப் படங்கள்)

1. பக்த போதனா
2. வீர பீம்சேனன்
3. விஷ்வ மோகினி
4.கிருஹலஷ்மி
5. ரஷிய கேர்ள்ஸ்
6. அபிசீனிய அடிமை
7. கிருஷ்ணகுமாரி
8. சாம்ராட் சிலதித்யா
9. மைனாகுமாரி
10. படித்த மனைவி
11. குணசுந்தரி
12. வீரகுணாளன்
13. தேவதாசி
14.காலாசோர்15. நீரா
16. நாகபத்மினி
17.வீர பத்மினி
18.இரவு காதல்
19.பேயும் பெண்ணும் (1930)
20. நந்தனார்
21.ஹிந்துஸ்தானின் பெருமை
22.ராஜேஸ்வரி
23.அனாதைப்பெண்
24.உஷாசுந்தரி
25.பக்தவத்சலா 1931 (தமிழ் நாட்டில் எடுக்கப்பட்ட படம்)

இந்தி மொழியில் பங்கேற்ற பேசும் படங்கள்..

1.இந்திரா
2. காலேஜ் கேர்ள்
3. பாரிஸ்டர் வைஃப்
4. மத்லபி துனியா
5. தேவகி

ராஜா டைரக்ட் செய்த தமிழ் படங்கள்

1. பாரிஜாத புஷ்பஹாரம் (1932,இந்தப் படத்தை இயக்கி நடித்துள்ளார்)
2. மேனகா (1935)
3. வசந்த சேனா (1936, இப்படத்திற்கு வசனம் எழுதி நடித்தும் உள்ளார்)
4. மைனர் ராஜாமணி (1937)
5. சந்திரகாந்தா (1936)
6. விஷ்ணுலீலா (1938)
7. நந்தகுமார் (1938, இதில் நடித்துள்ளார்)
8. திருநீலகண்டர் (1939)
9. ஆராய்ச்சி மணி (1942)

இதுமட்டுமின்றி இந்திய திரையுலகிற்கு ராஜா சாண்டோ பங்களிப்பு செய்த படங்கள் என 1994 ல் வெளியான சினிமா பற்றிய என்சைக்ளோபிடீயா, ராஜாவின் படங்களின் எண்ணிக்கையை 56 எனக் குறிப்பிட்டுள்ளது. அதன் விபரங்களும் அதில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் மேனகா படத்திற்கு சில சிறப்புகள் உண்டு. நகைச்சுவை மேதை கலைவாணர் இதில்தான் தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். கே.ஆர் இராமசாமி இதில் சிறிய வேடத்தில் அறிமுகமானார். டி.கே.எஸ் சகோதரர்கள் நடித்த இந்த படத்தின் கதை சுவாரஸ்யமானது. ராஜா சாண்டோவின் இயக்கத்தில், அந்த ஆண்டில் வெளியான படங்களில் வெற்றிகரமான படமாக ஓடிய படம் என்ற பெருமையை 'மேனகா' பெற்றது. பிற்காலத்தில் கலைவாணர் எனப் புகழ்பெற்ற என்.எஸ்.கே. யின் திரையுலகப் பிரவேசம் மேனகாவின் மூலம்தான் நடந்தது.

இந்தப் படத்தில் டி.கே.எஸ். சகோதரர்கள் நான்குபேருமே நடித்தனர். மேனகாவின் தந்தை சாம்பசிவ ஐயங்காராக டி.கே.சங்கரன் நடித்தார். பெருந்தேவி என்னும் விதவைப் பெண் வேடத்தில் வேடப்பொருத்தத்துடன் டி.கே. முத்துசாமி தோன்றி பாராட்டுப் பெற்றார்.

பெண்கள் கூச்சப்பட்டு நடிக்க முன்வராத அந்தக் காலத்தில், நாடகங்களில் ஆண்களே பெண் வேடமிட்டு நடிக்கும் முறையைப் பின்பற்றி டி.கே.சண்முகத்தின் சகோதரர் முத்துசாமி தலையை மழித்து விதவைப் பெண் வேடமிட்டு நடித்தார். அதேபோல வேலைக்கார ரங்கராஜனின் மனைவி மற்றும் மகள் வேடங்களிலும் முறையே டி.என். சுப்பையா, பி.எஸ்.திவாகரன் என்ற ஆண்களே நடித்தனர் என்பதும், அவ்வை சண்முகி போன்ற வேடங்களுக்கு இதுவே முன்னோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரைப்படமான முதல் நாவல் என்பதுடன், முதல் சமூகத் தமிழ்ப் படம் என்ற பெருமையையும் “மேனகா' பெற்றது.

அந்நாளில் புகழ்பெற்ற நடிகரும், சூப்பர் ஸ்டார்களில் ஒருவருமான தியாகராஜ பாகவதர் நடிப்பில் உருவான 'சிவகவி' படத்தின் டைரக்‌ஷன் பொறுப்பை ஏற்றார். ஒப்பந்தப்படி படத்தினை இயக்கிவந்த சாண்டோ, படத் தயாரிப்பில் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக பாதியிலே விட்டு விலகினார். பின் கோவையில் சிலகாலம் தங்கியிருந்தார்.

தமிழ்சினிமாவின் அந்நாளைய சாபக்கேடுக்கு ராஜாவும் தப்பவில்லை. சம்பாதித்த எதையும் சேமித்துவைக்கும் பழக்கம் இல்லாத ராஜா, தம் இறுதிக்காலத்தில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தார். நெருங்கிய நண்பர்கள் உதவியால் ஓரளவு சமாளித்தாலும், அவர் அல்லல்படும் அளவுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டது.

ராஜா சாண்டோ, தன் மனைவி ஜானகி பாய் பெயரில் ஜானகி பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தையும் துவங்கி ஒரிரு தமிழ்ப்படங்களை துவக்கியதாக குறிப்பு காணப்படுகிறது. ஆனால் அது பாதி தயாரிப்புடன் நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிகிறது.

1942 ஆம் ஆண்டு, ராஜா சாண்டோ ஒரு விநோத நோயால் பாதிக்கப்பட்டார். அவரது உடலில் முதுகுப் பகுதியில் ஒரு கட்டி உருவாகி அவருக்கு தொந்தரவு அளித்தது. இதை எடுக்க அவர் புகழ்பெற்ற மருத்துவமனையை அணுகினார். ஆபரேஷன் செய்யப்பட்டது. அதற்கான செலவை நண்பர்கள் உதவியுடன் செலுத்தினார். இருப்பினும் அதே இடத்தில் அடுத்தடுத்து கட்டிகள் உருவாகி தொடர்ந்து சிகிச்சையளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இந்த முறை அவரது நண்பர்கள் உஷாரானார்கள். ராஜா உடல்நிலை முன்போல இல்லை. அவருக்கு செலவிடும் பணம் திரும்ப வராது என அவர்கள் முடிவெடுத்தனரோ என்னவோ, சத்தமில்லாமல் விலகிக்கொண்டனர். மருத்துவரும் அவர் தன் இறுதிக்காலத்தை நெருங்கிவிட்டதாகவே ராஜாவின் மனைவி ஜானகியிடம் தெரிவித்தனர்.

ஆனால் உடல் வலிமை மட்டுமின்றி, மனவலிமையும் அதிகம் பெற்றவரான ராஜா, அதிலிருந்து அதிசயமாக மீண்டார். சகஜமாகி உலவத் துவங்கினார். சில காலம் அதிக உற்சாகத்துடன் காலம் கழித்த ராஜா, திடீர் மாரடைப்பு காரணமாக 1943 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி கோவையில் மரணமடைந்தார். தமிழில் ராஜா சாண்டோ கடைசியாக டைரக்ட் செய்த படம் 'ஆராய்ச்சிமணி'.

அதீதி திறமையால், வட இந்தியாவில் கோலோச்சிய தமிழகத்தின் முதல் கலைஞனான ராஜா சாண்டோவின் சினிமா சேவையைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு அவரது பெயரில் 'ராஜா சாண்டோ' நினைவு விருதொன்றை நிறுவியது. ஆண்டுதோறும் தமிழ் சினிமா வளர்ச்சிக்கு அரும் பணியாற்றிய கலைஞர்களில் ஒருவருக்கு வழங்கி சிறப்பிக்கின்றது.

தமிழ்த்திரையுலக வரலாற்றில் ராஜா சாண்டோவின் சாதனை தவிர்க்க முடியாத பக்கங்கள். திரையுலகின் கடைசி சாதனையாளர் உள்ளவரை அவரது புகழ் நிலைத்து நிற்கும்!

--- நன்றி விகடன், பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன்Similar Post You May Like

 • கொரோனாவின் பிடியில் கோவை மற்றும் சேலம்

   Fri, September 25, 2020 No Comments Read More...

  தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 5692 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 642 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 311 பேருக்கும

 • தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 63 டாக்டர்கள் பலி

   Sat, September 19, 2020 No Comments Read More...

  தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 63 டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் கூறியிருக்கும் அதிர்ச்சி தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ப

 • மலம்புழா அணை... கேரளத்துக்குத் தமிழர்கள் அளித்த கொடை!

   Tue, September 15, 2020 No Comments Read More...

  நாட்டின் தற்போதைய தலையாயப் பிரச்னை, தண்ணீர். தென் மாநிலங்களில் கேரளா மட்டுமே தண்ணீர் நிறைவுபெற்ற மாநிலமாகத் திகழ்கிறது. கேரளா முழுவதுமே சிறியதும் பெரியதுமாக ஆறுகள் ஓடி, அந்த மாநிலத்தை வளப்படுத்துகின்ற
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right