மே 23- ஆமையின பாதுகாப்பு தினம்

 Sunday, May 23, 2021  06:30 AM   No Comments

மே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் சர்வதேச தினங்கள் அனுஸ்டிக்கப்படுவதற்கு குறித்த விடயத்தின் முக்கியத்துவமே மூல காரணமாகும்.

சர்வதேச தினங்களின் கருப்பொருள் மானுடம் சார்ந்ததாக மாத்திரமல்லாமல் சில முக்கியத்துவம் வாய்ந்த ஜீவராசிகள்; தொடர்பாகவும் இந்த விசேட தினங்கள் அனுஸ்டிக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் 2000ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் மே மாதம் 23ம் தேதி ஆமை இனத்தைப் பாதுகாக்கும் உலக தினம் பிரகடனப்படுத்தப்பட்டு ஆமை இனத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மானுடத்துக்கு விளக்க வகை செய்யப்பட்டுள்ளது.ஆமை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உடலமைப்பைக் கொண்டது. இதன் உடல் ஓட்டினால் மூடப்பட்டதாக இருக்கும். உலகில் ஏறத்தாழ 300 வகையான ஆமையினங்கள் உள்ளதாக ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இவற்றில் சில இனங்கள் அழியும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன. கடலாமைகள் ஒப்பீட்டளவில் பெரியவை. தோல்முதுகுக் கடலாமை (leatherback sea turtle) என்ற ஆமையினம் 900 கிலோகிராம் நிறை வரை வளர்வதாகக் கூறப்படுகின்றது.
ஆமையினத்தை பாதுகாக்கும் உலக தினமானது கடலாமைகளின் பாதுகாப்பினை வலியுறுத்தவும் அவை எதிர்நோக்கும் பல்வேறு அழிவுப் பயமுறுத்தல்களிலிருந்தும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றியும் ஆராய்வதாக உள்ளது. பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடல் ஆமைகள் வாழ்ந்து வருகின்றன. டைனோஸர்களுக்கும் முன்பே பூமியில் தோன்றியவை இவை என்று நம்பப்படுகின்றது.

எட்டு வகையான கடல் ஆமைகள் உலகத்தில் காணப்படுகின்றன. இவற்றில் ஐந்து வகை ஆமைகள் இந்திய, இலங்கை கடல் பகுதிகளில் வாழ்கின்றன. சூழ்நிலைக்கு ஏற்ப அவை தன் உடல் வெப்பத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும். உடல் வெப்பத்தை சீரமைக்கவும், சுவாசிப்பதற்கும் கடலின் மேல் மட்டத்துக்கு வந்து செல்லும். நிலத்தில் வாழும் ஆமை தன்னுடைய தலை, கால்களை ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்.

ஆனால், கடல் ஆமைகளால் இப்படிச் செய்ய முடியாது. கடல் ஆமைகளில் மிகச் சிறியது சிற்றாமை. வளர்ந்த சிற்றாமையின் எடை சுமார் ஐம்பது கிலோ இருக்கும். சுமார் 80 செ.மீ. நீளம் வரை வளரும். பெரிய ஆமைகளின் எடை சராசரியாக 250-400 கிலோ கிராம்களாகும். சில இனங்கள் 900 கிலோ வரை வளர்ந்து காணப்படும். கடல் ஆமைகள் நிலத்தில் வாழும் பெரிய ஆமைகளில் இருந்து தோன்றியவைதான். இவை டொல்பின்கள் போல சில நிமிடங்களுக்கொருமுறை மூச்சு விட மேலே வரும்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel